மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு

ஆலந்தூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் மூவரசன்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.கே.ரவி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரகாஷ், செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வார்டு உறுப்பினர்கள், நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில், குடிநீர் கட்டணம் செலுத்தியும் குடிநீர் வருவதில்லை, சீரான குடிநீர் வழங்க வேண்டும், பழுதடைந்த சாலைகள், மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பேசினர்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.கே.ரவி பேசும்போது, அனைத்து வார்டுகளிலும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர வளச்சி குழும நிதியில் இருந்து சபாபதி நகர் பூங்காவை சீரமைத்து அங்கு மின்விளக்கு, விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அமைக்க ரூ.25 லட்சமும், சுப்பிரமணிய நகர் 2வது மற்றும் 3வது தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.25 லட்சமும், தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுப்பிரமணிய நகர் 7வது தெருவில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.8.40 லட்சமும், மூவரசன்பட்டு குளத்தை சீரமைக்க ரூ.8.75 லட்சமும் ஒதுக்க மதிப்பீடு தயாரிக்கபட்டுள்ளது. விரைவில் இதற்கான பணி தொடங்கும், என்றார்.

Related Stories: