இந்தியா- ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 12 பேர் கைது: திருவல்லிக்கேணி போலீஸ் நடவடிக்கை

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 12 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்கள் பங்கேற்கும் 3வது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் சர்வதேச வீரர்கள் பங்கேற்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதை சிலர் பயன்படுத்தி கொண்டு டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வைத்து கொண்டு, ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட ரூ.750 டிக்கெட், நேற்று போட்டி தொடங்கும் முன்பு கள்ளச்சந்தையில் இரு மடங்கு விலையில் விற்பனை செய்தனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் கள்ளச்சந்தையில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் கவனத்துக்கு வந்தது. உடனே திருவல்லிக்கேணி போலீசார் சாதாரண உடையில் மைதானம் அமைந்துள்ள பகுதியில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை கண்காணித்தனர். அப்போது கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்த 12 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 12 பேரிடம் போலீசார் டிக்கெட் மொத்தமாக கிடைத்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: