அங்கன்வாடி மையத்தில் குடிமகன்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரி, அம்பேத்கர் தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அப்பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குழந்தைகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். சமீப காலமாக இந்த அங்கன்வாடி மையத்தில் அத்துமீறி நுழையும் குடிமகன்கள், மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். அத்துடன் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, புகை பிடிப்பது, உணவு கழிவுகளை வீசிவிட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் சறுக்கு மரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால், தினமும் இந்த அங்கன்வாடி மையத்திற்கு வேலைக்கு வரும் ஆசிரியர், அங்கு சிதறி கிடக்கும் காலி மற்றும் உடைந்த மது பாட்டில்களை அப்புறப்படுத்தி, அந்த இடங்களை சுத்தம் செய்வதே பெரிய வேலையாக உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. தினமும் வகுப்பு முடிந்ததும், மெயின்கேட்டை ஆசிரியர் பூட்டி சென்று விடுவார். அப்படியிருந்தும் கூட, குடிமகன்கள் பூட்டை உடைத்தும், சுவர் ஏறிக் குதித்தும் உள்ளே நுழைந்து குடித்து, கூத்தடித்து விட்டு செல்கின்றனர்.

இவ்வாறு இதுவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட பூட்டுகளை குடிமகன்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக ஆசிரியர் தெரிவித்தார்.  எனவே, குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, அவர்களுக்கு குடிமகன்களால் ஒரு ஆபத்து ஏற்படும் முன், பம்மல் அங்கன்வாடி மையத்தில் அத்துமீறி உள்ளே நுழையும் குடிமகன்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் போலீசார் தினமும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி, இந்த அங்கன்வாடி மையத்தை கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: