கிரிப்டோ கரன்சி பெயரில் பண மோசடி செய்தவரை கடத்தி தாக்கியவர் கைது: மற்றொருவருக்கு வலை

பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் சைதாப்பேட்டையை சேர்ந்த தினேஷ் (37), ராஜ்குமார் (39) ஆகிய இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளனர்.  இதில் இவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி பெயரில் சந்திரசேகர் ஏமாற்றி விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாமீனில் சந்திரசேகர் வெளிவந்துள்ளார். இதையறிந்த தினேஷ் மற்றும் ராஜ்குமார் இருவரும் சேர்ந்து சந்திரசேகரை போரூருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் ஓட்டல் அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் சந்திரசேகரிடம் பணிபுரிந்த ஒரு பெண்ணின் சொகுசு காரை மிரட்டி பறித்துக் கொண்டு சந்திரசேகரை அந்த காரில் கடத்தி சென்று மாதவரத்தில் இறக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சந்திரசேகர் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: