வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கைது: சம்பள பாக்கி தராததால் ஊழியர் வெறிச்செயல்

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை வெட்டி, அவரை நிர்வாணமாக்கி மிரட்டி, நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மூதாட்டியின் மகன் சம்பள பாக்கி தராததால் கடை ஊழியர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருபவர் கங்கா (70). இவரது கணவர் உமாசங்கர் (76). இவர் காவல் ஆய்வாளராக இருந்து கடந்த 2000ல் ஓய்வு பெற்று,  இறந்துள்ளார். இதையடுத்து, தனது மகன் மகாதேவனுடன் (45)  இவர் வசித்து வருகிறார். கடந்த 21ம் தேதி இவரது மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், கங்கா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, இந்த வீட்டிற்கு வந்த 5 பேர் கதவைத் தட்டியுள்ளனர். கதவை திறந்த கங்கா, ‘‘நீங்கள் யார்’’ என்று கேட்டுள்ளார். அதற்கு, உங்கள் மகன் வீட்டில் இல்லையா என்று கேட்டுள்ளனர். அப்போது, என் மகன், மருமகள் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர், என கங்கா கூறியுள்ளார். உடனே, மர்ம நபர்கள் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்ததால், காப்பாற்றுங்கள் என்று கங்கா சத்தம் போட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கங்காவை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளி, பின்னர் அவரது கை, கால்களை கட்டி, வாயில் துணி வைத்து அடைத்துள்ளனர். இதற்கிடையில் மூதாட்டி அந்த கும்பலை தடுக்க முயன்றபோது அரிவாளால் அவரது கை விரல்களை வெட்டியுள்ளனர்.

பின்னர், அந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து, அதில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம், கவுரி அணிந்திருந்த 5 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். பின்னர், கவுரியை நிர்வாணப்படுத்தி அதை செல்போனில் வீடியோ எடுத்த மர்ம நபர்கள், போலீசில் புகார் அளித்தால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம், என மிரட்டி சென்றுள்ளனர்.  இதையடுத்து, வேலைக்கு சென்று வீடு திரும்பிய மகன் மகாதேவன், ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தாயரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாக்கம் போலீசார், கங்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு கேமராவில் 2 பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பலின் அடையாளம் தெரிந்தது. அந்த கும்பலின் படத்தை மகாதேவனிடம் காட்டியபோது, அதில் ஒருவர் மகாதேவனின் கடையில் வேலை செய்யும் மணிகண்டன் என்பது தெரியவந்தது. மணிகண்டனின் செல்போன் சிக்னலை வைத்து தனிப்படை போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். கடைசியாக தி.நகர் பகுதியில் சிக்னல் காட்டியது. சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திக்கொண்டிருந்த மணிகண்டன் உள்பட 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர், மகாதேவன் நடத்தி வரும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 7 மாத சம்பளம் பாக்கி இருந்ததால் பலமுறை சம்பளப் பாக்கியை தரும்படி மகாதேவனிடம் கேட்டுள்ளார். அதற்கு மகாதேவன் தற்போது என்னிடம் பணம் இல்லை, என்று கூறியுள்ளார். இதனால், அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பர்களான பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த துரை சிங்கம் (28), துரைப் பாண்டி (27), ரமேஷ் (29), மற்றொரு மணிகண்டன் (27) ஆகியோருடன் சேர்ந்து, மகாதேவன் வீட்டிற்கு சென்று, அவரது தாயாரை சரமாரியாக தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் ரூ.35 ஆயிரத்தை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* கவனம் தேவை இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததால், அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டியது குறிபிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, வீட்டில் தனியாக வசித்து வரும் முதியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் கதவைத் தட்டினால் முதலில் ஜன்னலை திறந்து, தெரிந்த முகம்தானா என்று பார்த்த பிறகு கதவைத் திறக்க வேண்டும். உங்களுக்கு உதவி தேவையென்றால் காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்தால், உடனே உங்களுக்கு காவல்துறை உதவி செய்யும் என தெரிவித்தனர்.

* ரூ.1 கோடி வரை கடன் மகாதேவன் மற்றும் இவரது மனைவி இருவரும் அரும்பாக்கத்தில் காய்கறி மற்றும் தேங்காய் ஏற்றுமதி தொழில் செய்து வருவதாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மகாதேவன் பலபேரிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கியுள்ளதாகவும் தெரிய வந்தது. இதில் கடனை திருப்பிக் கேட்க வந்த பலரை பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மகாதேவன் அலைக்கழித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது

Related Stories: