ஐகோர்ட்டிற்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 75. தற்போது 58 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 17 நீதிபதிகள் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.மதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக், ஜெ.சத்யநராயண பிரசாத் ஆகியோர், கடந்த 2021ம் ஆண்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். 5 பேரையும் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து திரெளபதி முர்மு உத்தரவிட்டார்.ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்ட நீதிபதிகளான இவர்களில் பி.தனபால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களது பெயர் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 62 ஆக உயரும்.

* ஒன்றிய அரசால் நீதிபதிகள் சீனியாரிட்டி இழப்பு கொலிஜியம் பரிந்துரை அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 17ம் தேதி கொலிஜியம் பரிந்துரைத்த ராமசாமி நீலகண்டன், ஜான் சத்யனின் நியமனம் குறித்து ஒன்றிய அரசு இதுவரை எந்த முடிவும் வெளியிடவில்லை. இதில், ராமசாமி நீலகண்டன், தற்போது பரிந்துரைக்கப்பட்ட கே.ராஜசேகரை விட சீனியர் ஆவார். எனவே ராஜசேகர் நியமிக்கப்படுவதற்கு முன்பாக ராமசாமி நீலகண்டன் நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் சீனியாரிட்டியில் இடையூறு ஏற்படும். இது மிகவும் கவலைக்குரிய, நியாயமற்ற விஷயம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: