அனைத்து கூட்டுறவு வங்கிகளில் கொண்டுவரப்பட்டுள்ள ஆன்லைன் பணப்பரிமாற்றம் மக்களிடையே வரவேற்பு பெறும்: கூட்டுறவு துறை செயலாளர் பேட்டி

சென்னை: இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் முன்னோடியாக கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்களிடையே வரவேற்பு கிடைக்கும் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்: கூட்டுறவுத்துறையில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு முடிவதற்குள்ளாகவே 16.86 லட்சம் உறுப்பினர்களுக்கு ரூ.12,968 கோடி அளவிற்கு வேளாண்மை கடன் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல, தமிழ்நாட்டில் 2,965 கடைகள் ‘‘நம்ம ஊர் நம்ம நியாயவிலைக்கடை’’ முயற்சியின் கீழ் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த ஓராண்டு முயற்சிக்கு பின்னர், தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வழிகளில் பலன் அடைய முடியும். குறிப்பாக, தனியார் வங்கிகள் மற்றும் இதர வங்கிகளைகு காட்டிலும் கூட்டுறவு வங்கிகளில் எளிய முறையில் கடன்களை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் முறைகளை பற்றி அறியாதவர்களுக்காக மல்டி சர்வீஸ் சேவைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: