பிளஸ்2 இயற்பியல் தேர்வில் கடினமான கேள்விகள்: சென்டம் குறையும் என மாணவர்கள் புலம்பல்

சென்னை: பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை தெரியாமல் திணறினர். இதனால் இப்பாடத்தில் மாணவர்களுக்கு 22 மதிப்பெண்கள் குறையும் என கூறப்படுகிறது. எனவே, இயற்பியல் பாடத்தில் எத்தனை பேர்‘சென்டம்’ எடுப்பார்கள் என்பது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. தமிழ் பாடத் தேர்வில் 49 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. அடுத்து, ஆங்கில தேர்வில் 50 ஆயிரம் பங்கேற்கவில்லை.

இது, தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் குழப்பதை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இயற்பியல் தேர்வில் இடம்பெற்ற கேள்வித்தாள், பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது போல இல்லை. பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் 15 கேள்விகள் எளிதாக இருந்தன. ஆனால், சில கேள்விகள் ஏற்கெனவே தவிர்க்கப்பட்ட பாடங்களில் இருந்து இடம் பெற்றிருந்தன. குறிப்பாக 3, 5,8,10, மற்றும் 11வது கேள்விகள் கடினமாக இருந்தன. 33வது கேள்விக்கு 3 மதிப்பெண்கள். இந்த கேள்வி அணுக்கள் எடை கண்டுபிடிக்க கணக்கீடு செய்யும் வகையில் கேட்கப்பட்டு இருந்தது.

அதேபோல கூலும் விதி, கூலும் விசை மற்றும் புவியீர்ப்பு விசை ஆகியவற்றை கண்டுபிடிக்கவும் கேட்கப்பட்டு இருந்தன. இவை நீக்கப்பட்ட பாடங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. 34வது கேள்வியில் பிரிவு ‘அ’ என்னும் 5 மதிப்பெண் கேள்வி எதிர்பாராத பாடத்தில்  இருந்து கேட்கப்பட்டுள்ளது. 36வது கேள்வியில் பிரிவு ‘அ’ கேள்வி வழக்கமாக 5 மதிப்பெண் கேள்வி மின் மாற்றி பகுதியில் இருந்து கேட்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம்  இடம் பெற்ற இந்த கேள்வி வேறு பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்களின் படி இடம் பெற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

அதனால் நன்றாக படிக்கும் மாணவர்களே இந்த கேள்விகளுக்கு விடை எழுத முடியாமல் தவித்தனர். இதன்படி நன்றாக படித்தவர்கள் மொத்த மதிப்பெண்ணில் 22 மதிப்பெண்கள் குறைவாகத் தான் பெறுவார்கள். வழக்கமாக புளூ பிரிண்ட் என்பது ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படும். அதன்படி கேள்விகள் இடம் பெறும். ஆனால் இந்த ஆண்டு புளூபிரிண்ட் இல்லாமல் கேள்வித்தாள்  தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்வுகளிலும் கணக்கு, வேதியியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகளும் கடினமாக இருக்கும் என்ற அச்சம் இப்போதே மாணவர்கள் மத்தியில் தொற்றிக் கெண்டது. ஒருவேளை முக்கிய பாடத் தேர்வுகள் கடிமான இருந்து விட்டால் மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் குறையும். அப்படி குறையும்பட்சத்தில் அவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளின் ரேங்க் பட்டியலிலும் பின் தங்க நேரிடும்.

Related Stories: