மீஞ்சூர் அருகே போலீசாரால் தேடப்பட்ட பழைய குற்றவாளிக்கு வெட்டு: பொன்னேரி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே கஞ்சா போதையில் ஏற்பட்ட மோதலில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இது ெதாடர்பாக 3 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (21). இவர் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வல்லரசுவை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு மீஞ்சூர் அடுத்த நெய்தவாயல் பெரிய குளக்கரை அருகே சக நண்பர்களுடன் வல்லரசு கஞ்சா போதையில் இருந்துள்ளார். அப்போது, திடீரென ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் வல்லரசுவின் தலை, கை, கால்களில் வெட்டிவிட்டு நண்பர்கள் தப்பி விட்டனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக வந்த சிலர், மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வல்லரசுவை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வல்லரசை வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மணிவண்ணன் மேற்பார்வையில் உதவி ஆணையர் கயிலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு, பன்னீர்செல்வம் கொண்ட தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டு காலனியை சேர்ந்த விஷால் (22), சிவனேசன் (21), சாது (20) ஆகியோர் நேற்று பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: