கோவையில் இளம் குற்றவாளிகள் அதிகரிப்பு-கஞ்சா, அடிதடி மோதல்களில் தொடர்பு

கோவை :  கோவை நகர், புறநகர் பகுதிகளில்  இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகமாகி விட்டதாக தெரியவந்துள்ளது. 18 முதல் 25 வயதிற்குட்பட்ட சிலர் அடிதடி மோதல், கஞ்சா, போதை மாத்திரை விற்பனைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. கோவை சிறையில் 1,850 பேர் உள்ளனர். தினமும் 20 முதல் 30 பேர் பல்வேறு குற்றங்களில் கைதாகி சிறைக்கு செல்கின்றனர். நடப்பாண்டில் இளங்குற்றவாளிகள் சிறைக்கு செல்வது கணிசமாக அதிகரித்து வருகிறது.  ஒரு முறை குற்றத்தில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு கைதாகி சிறைக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.

 கஞ்சா விற்பனையில் கல்லூரி மாணவர்கள் சிலர் கைதாகியுள்ளனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்கள் படிப்புடன் கஞ்சா வியாபாரம் செய்வது தெரியவந்துள்ளது. விடுதியில் தங்கி தங்களுக்கு அறிமுகம் ஆன நபர்கள் கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்து வருகின்றனர். இரு சக்கர வாகனம், செல்போன், லேப் டாப் திருட்டுகளில் இளம் வயதினர் அதிகளவு ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது. ரவுடியிசத்திலும் இளம் வயதினர் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சரவணம்பட்டி, கணபதி, ரத்தினபுரி, கண்ணப்ப நகர், மோர் மார்க்கெட், போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம் ஹவுசிங் யூனிட், பொன்னையராஜபுரம், ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் வட்டாரங்களில் ஏரியா ரவுடிகள் அட்டகாசம் குறையவில்லை. வெள்ளலூர் அடுக்குமாடி பகுதி, கோவைப்புதூர் அறிவொளி நகர், சுகுணாபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் கேங்க் ரவுடிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவுடியிச நடவடிக்கையில் அதிக இளம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட இளம் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே சென்று மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டு மீண்டும் கைது செய்யப்படுவது அதிகமாகி விட்டது. குற்றவாளிகளில் 20 முதல் 45 வயது வரையில் இருப்பவர்கள் 70 சதவீதம் பேர் இருப்பதாக தெரிகிறது. மோசடி, ஏமாற்றுதல் போன்றவற்றிலும் இளம் வயதினர் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். சைபர் குற்றங்களில் இளம் வயதினர் அதிகமாக ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘சிறையில் இருந்து வெளியே செல்பவர்கள் குறிப்பாக தண்டனை கைதிகளில் குற்றத்தில் ஈடுபட்டால் நன்னடத்தை பிரிவினர், இவர்களின் ஜாமீனை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கலாம். இளம் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில்  கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வெளி மாவட்டங்களை சேர்ந்த வாலிபர்கள் அதிகளவு கோவையில் தங்கியுள்ளனர். குடும்பத்தை பிரிந்து வசிக்கும் இவர்களில் சிலர் கஞ்சா, திருட்டு என பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கஞ்சா கும்பல் பலர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள்.  ரவுடித்தனம் செய்யும் வாலிபர்களின் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறைக்கு சென்றவர்கள், ஜாமீனில் வந்தவர்கள் என குற்ற நடவடிக்கை தொடர்பில் இருப்பவர்களை கண்காணித்து வருகிறோம்.

குடும்பத்தினர் இளம் வயதினரை கண்காணிக்க வேண்டும். சிலருக்கு தங்களது வாரிசுகள் என்ன தொழில் செய்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.

வேலைக்கு செல்லாமல் சும்மா சுற்றும் வாலிபர்கள் பல்வேறு குற்றங்களை செய்கிறார்கள். முறையாக வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. பல்வேறு குடிசைப்பகுதி, குற்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரமாக நடக்கிறது’’ என்றார்.

Related Stories: