கடமலை-மயிலை ஒன்றியத்தில் கோடைமழை குறைவால் குடிநீர் பஞ்சம்-பொதுமக்கள் கவலை

வருசநாடு : கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிளுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மூல வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் கோடைமழை சரியாக பெய்யாததால் ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் எற்பட்டு வருகிறது. எனவே உறைகிணறுகள் அனைத்தையும் தூர்வாரி முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் மூல வைகை ஆற்றில் இருந்து தான் தண்ணீர் வருகிறது. தற்போது மழை பெய்யாததால் ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் இல்லை. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குடிநீர் பற்றாக்குறையை போக்க மூல வைகை ஆற்றில் பல இடங்களில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் மட்டும் நிரந்தர குடிநீர் பஞ்சத்தை நீக்க முடியும்‌. இதற்கு தேனி மாவட்ட ஆட்சியரும், ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நீர்வள ஆர்வலர்கள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளுக்கு வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உறைகிணறுகளை தூர்வாரினால் மட்டுமே குடிநீர் பஞ்சமின்றி வழங்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: