தேனி நகரில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி வாடி வரும் வால்கரடு ஓடைக்கு வழி பிறக்குமா?

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தேனி : தேனி நகரின் முக்கிய பகுதியான வால்கரடு கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாதையான வால்கரடு ஓடையானது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்து போனதால் நீர்வழித்தடம் மறைந்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்துள்ளது.தேனி நகரில் வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்பது சர்வ சாதாரணமானதாக மாறிப்போய்விட்டது. தேனி நகர் கொட்டக்குடி ஆற்றின் மதகு பகுதில் இருந்து அமைந்துள்ள ராஜவாய்க்கால் சுமார் 2.5 கிமீ தூரம் சென்று கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாயை சென்றடையும்.

சுமார் 50 அடி அகலமுள்ள இந்த ராஜவாய்க்காலை வணிகர்கள், பொதுமக்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டியதால் ராஜவாய்க்கால் சுருங்கி கழிவுநீரோடையாகி போனது. இதனால், ராஜவாய்க்காலில் மழைகாலங்களில் தேனி நகர மழைநீர் வடிந்தோட வழியில்லாமல் சாலைகளில் தேங்கியும், பட்டா குடியிருப்புகளுக்குள் புகுந்தும் விடுகிறது.

இந்நிலையில், தேனியை சேர்ந்த சமூக அலுவலர் ராஜதுரை என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்த ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது ராஜவாய்க்காலுக்கு விடியல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.தேனி நகரில் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு போலவே மிகப்பிரதானமான ஓடையாக மற்றொரு ஓடை இருந்து வருகிறது. தேனி புதிய பஸ் நிலையத்திற்கு வடக்கு புறம், பெரியகுளம் பைபாஸ் சாலையில் உள்ள வால்கரட்டில் இடதுபுறம் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் உள்ளது.

இத்தகைய ரிசர்வ் வனப்பகுதிக்குள் மழை காலங்களில் பெய்யும் நீரை சேமிக்க பிரமாண்ட கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் நீர் நிரம்பியது, இக்கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வால்கரட்டு தரிசு ஓடையாக அங்கிருந்து விஸ்வதாஸ் நகர், சிவாஜி நகர், பாரஸ்ட் ரோடு வழியாக தேனி டூ மதுரை செல்லும் சாலையை கடந்து தேனி கொட்டக்குடி ஆற்று பகுதியில் இருந்து வரும் ராஜவாய்க்காலில் வால்கரடு கண்மாய் நீர் கலக்கும் வகையில் ஓடையானது சுமார் 2 கிமீ நீளத்திற்கு உள்ளது. இந்த வால்கரடு ஓடையானது 50 அடி அகலம் இருந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய நீர்வழித்தடத்தில் உள்ள ஓடையில் தேங்கும் மணல் மூலமாக தண்ணீர் நிலத்தடியில் சென்ற சேருவதன் மூலமாக தேனி நகர மக்களுக்கான நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது. ஆனால் இந்த வால்கரடு ஓடையானது இருந்த இடமோ, அதன் தடமோ தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. வால்கரடு ரிசர்வ் வனப்பகுதியில் தொடங்கும் ஓடையானது, ஓடை தொடங்கும் இடத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டது. அங்கிருந்த ஓடை தெரியாத அளவிற்கு ஓடையின் மீதே சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு விட்டன. இதில் ஒரு வீட்டிற்கும் மற்றொரு வீட்டிற்குமான இடைவெளியாக பல இடங்களில் 3 அடியாகவும் சில இடங்களில் 5 அடி முதல் 8 அடியாகவும் சிறுத்தும், குறுகியும், அகன்றுமாக உள்ளது.

ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்து வருவதால் மழைகாலங்களில் வால்கரடிலிருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ள நீர் ஓடை வழியாக வெளியேற வழியில்லாத படி ஆக்கிரமிப்பு வீடுகள் நீர்வழித்தடத்தை அடைத்து விட்டதால் காட்டாற்று வெள்ளநீர் பட்டா வீடுகளுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் நீதிமன்றம் வரை சென்று ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை வைத்தால் மட்டுமே சிறுது

கவனத்தில் கொள்ளும் பொதுப்பணித்துறை, தானாக முன்வந்து இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: