செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம்மாமண்டூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்-மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

செய்யாறு :  செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஊராட்சிக்கு தலைவர் பார்வதி சீனிவாசன் நேற்று தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நவரை பட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  மாவட்ட நிர்வாகம் வெம்பாக்கம் ஒன்றியத்தில் 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி அளித்திருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் வெம்பாக்கம், அழிவிடைதாங்கி, தென்னம்பட்டு, சுணைப்பட்டு, வெங்களத்தூர், கீழ்நெல்லி உள்ளிட்ட 6 கிராமங்களில் முதற்கட்டமாக திறக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நேற்று 2வது கட்டமாக மாவட்டத்தில் பெரிய ஏரியான மாமண்டூர் ஏரி பாசனத்தை நம்பி பயிரிடப்படும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள மாமண்டூர் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கிய மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து தமிழ்நாடு முதல்வர் விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை ஒதுக்கி விவசாயிகளின் நலனை காத்து வருவதாகவும்,  தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சன்னரகம் கிலோ ₹21.60 காசும், குண்டு ரகம் ₹21.15 காசுக்கும் 17 சதவீத ஈரப்பதத்துடன் எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 கிலோ எடை கொண்ட 600 முதல் 700 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று வரை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 70 விவசாயிகள் பதிவு செய்துள்ள

னர்.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜே.சி.கே.சீனிவாசன், என்.சங்கர், ஏ.ஞானவேல், மாவட்ட கவுன்சிலர் தெய்வமணி, ஊராட்சித் தலைவர் ஜெகன், திமுக பிரமுகர்கள் மதியழகன், லோகநாதன், எஸ்.கார்த்திகேயன், ரவி, ராஜகோபால், ஏகாம்பரம், சிவப்பிரகாசம், பெருமாள், ராமு, விஜயன், ராமலிங்கம், குப்பன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: