நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஐந்து மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்ததை மனதார பாராட்டுகிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: அங்கக வேளாண்மை ஊக்குவிக்க ‘நம்மாழ்வார் விருது’, பயிர் கடன் வழங்க நிதி, வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம், 10 லட்சம் குடும்பங்களுக்கு மரக்கன்று என அனைவரும்வரவேற்கும் நிதிநிலை அறிக்கை. மதிமுக பொது செயலாளர் வைகோ: பனை, தென்னை, வாழை, பலா, மிளகாய், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி மற்றும் மல்லிகை, முருங்கை, குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களால் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: கிராமப்புறங்களில் வாழும் மக்களில் 7.5 லட்சம் குடும்பங்களுக்கு தலா இரு தென்னை மரக்கன்றுகள், 10 லட்சம் குடும்பங்களுக்கு மா, பலா, கொய்யா, எலுமிச்சை, சீதாப்பழம் உள்ளிட்ட பழ மரக்கன்றுகள், உழவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பயனளிக்கும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பல கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் இடம் பெற்றாலும், அவை இயல்பானவை.இதுபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொது செயளாலர் டிடிவி.தினகரன் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: