ரூ.2.13 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ராயபுரம் மாடிப்பூங்கா: விரைவில் திறக்க ஏற்பாடு

தண்டையார்பேட்டை: ராயபுரம் மேம்பாலம் அருகே ரூ.2.13 கோடி செலவில் மாடிப்பூங்கா சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி மருத்துவமனை அருகே, கடந்த 1772ம் ஆண்டு நகர பாதுகாப்புக்காக பெரிய சுவர் பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது. சென்னை நகர வளர்ச்சியால் சுவர் சிறியதாகி, பின்னர் பூங்காவாக மாறிவிட்டது. பின்னர், 1957ம் ஆண்டு நவம்பரில், நீதிபதி ராஜகோபாலன் என்பவரால் மாடிப் பூங்காவாக சென்னை நகராண்மை கழகத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 1968ம் ஆண்டு வண்ண நீருற்று அமைக்கப்பட்டது. 2001ம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 6,865 சதுர மீட்டர் பரப்பளவில், பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மாடிப்பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனை சீரைமக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், 2.13 கோடி ரூபாய் மதிப்பில் மாடி பூங்கா சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பூங்காவில் எல்.இ.டி விளக்குகள், குழந்தைகள் விளையாடும் இடம், பொது மக்கள் அமருவதற்கான இட வசதி, யோகா, தியானம் செய்வதற்கு தனி இடம், நடப்பதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட நடைபாதை வசதி மற்றும் நவீன கழிப்பறை வசதி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. மக்கள் ஏறி, இறங்க சாய்தள நடைபாதை வசதி என ஒரு கிலோ மீட்டர் சுற்றுநீள நடைபாதை உள்ளிட்ட அம்சங்களுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவுபெற்று பூங்கா விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் இதுபோன்று வேறு எங்கும் மாடிப்பூங்கா இல்லை. எனவே இந்த பூங்காவிற்கு அதிகளவு மாணவர்களும், குழந்தைகளும் வருவார்கள். பொலிவிழந்து காணப்பட்ட இந்த பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. புதுப்பொலிவுடன் இந்தப் பூங்கா விரைவில் திறக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: