போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 பேர் மீது பொய் வழக்கு பதிந்த எஸ்ஐ மீது கிரிமினல் நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 பேர் மீது பொய் வழக்கு பதிவு ெசய்த எஸ்.ஐ மீது கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூர் கால்நடை சந்தை மேம்பாலம் அருகே கடந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி மதியம் 12.30 மணிக்கு சூர்யா, சதீஷ் ஆகியோரை போதைப்பொருள் வைத்திருந்ததாக திருவொற்றியூர் போலீசார் கைது ெசய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சூர்யா, சதீஷ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஒய்.சாலமன் ஆஜராகி, மனுதாரர்களை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நாளில் காலை 10.30 மணிக்கு மனுதாரர்கள் இருவரும் அவர்கள் மீது 2020ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் காட்பாடி ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

 காட்பாடியிலிருந்து திருவொற்றியூர் வருவதற்கு குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இந்த நிலையில் இருவரும் திருவொற்றியூரில் இருந்ததாக எப்படி கூறமுடியும். இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து ெசய்ய வேண்டும் என வாதிட்டார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் இருவரும் திருவொற்றியூர் கால்நடை சந்தை மேம்பாலத்தின்கீழ் போதைப்பொருள் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டனர். மனுதாரர் தரப்பு வாதங்கள் சரியானதா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களின் ஜாமீன் மனு போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. காட்பாடி நீதிமன்றத்தில் மனுதாரர்கள் ஆஜரான வீடியோ பதிவுகள் பெறப்பட்டு தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில் சம்மந்தப்பட்ட நாளில் இருவர் நீதிமன்றத்தில் ஆஜரானதாகவும், அவர்களின் உருவங்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  

காட்பாடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தொடர்புடைய 7 பேரும் காட்பாடி நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜராகியுள்ளனர் என்பது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட தின அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மனுதாரர்கள் இருவரும் அந்த வழக்கில் தொடர்புடைய 5 பேருடன் அன்றைய தினம் ஆஜராகியுள்ளனர். அங்கிருந்து திருவொற்றியூருக்கு 162 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை கார் அல்லது இருசக்கர வாகனத்தில் கடக்க குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகும். மனுதாரர்கள் அங்கிருந்து திருவொற்றியூர் வருவதற்கு சாத்தியமில்லை. எனவே, இது பொய் வழக்கு, சட்டவிரோதமாக மனுதாரர்களை கொடுமைபடுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர்கள் மீதான இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்கள் மீது பொய்யான புகாரை கூறி வழக்கு பதிவு செய்து இதுவரை நீதிமன்ற காவலில் அடைக்க காரணமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கிரிமினல் மற்றும்  துறைரீதியான நடவடிக்கையை டிஜிபி எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: