பூந்தமல்லியில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில்,உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் 21, 22 ஆம் தேதிகளில்,  உலக வன நாள், உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு  வருகிறது. இதையொட்டி, பூந்தமல்லி நகராட்சி வளாகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.  

உலக வனதினத்தில் வனங்களின் அவசியம் பற்றியும், அவைகள் எவ்வாறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி நம்மை வாழ வைத்து கொண்டிருக்கிறது என்பது குறித்தும், மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் நிகழ்ச்சியில் விளக்கி கூறப்பட்டது. இதையடுத்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்திலிருந்து அம்மான் நகர் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில், பங்கேற்றவர்கள் வனங்கள், தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட திமுக பிரதிநிதி லயன் சுதாகர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: