புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு கன்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி

சென்னை: புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு கன்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள 300 மதுபாட்டில் பெட்டிகளை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர், வடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு கன்டெய்னர்  லாரியில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசார் மூலம், மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், கடலூர் மஞ்சக்குப்பம் அருகே ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கன்டெய்னர்  லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, மீன்களை ஏற்றி செல்லும் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் மீன்கள் எதுவும் இல்லை. சந்தேகமடைந்த போலீசார், அந்த பெட்டிகளை இறக்கி வைத்து, சோதனை செய்த போது அந்த லாரியின் உள்ளே ஏராளமான மதுபாட்டில் பெட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரியையும், லாரியை ஓட்டி வந்தவர்களையும் கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த லாரியில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்த பகலவன் (48) மற்றும் நேபாளத்தை சேர்ந்த தேப் கத்தி மகன் கத்திரி (30) என்பதும் தெரியவந்தது.

 மேலும் இவர்கள், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. மதுபானங்கள் விற்கப்படும் ஒரு கடையில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கையை போன்று 300 பெட்டிகள் இருந்தது. இவற்றின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்களையும், கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தகுதி சான்று இல்லாத லாரி பிடிபட்ட லாரி பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் மதுபாட்டில் கடத்தல் வழக்கில் லாரி பிடிபட்டுள்ளது. மேலும் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்ட கன்டெய்னர்  லாரிக்கு தற்போது தகுதி சான்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகளவில் பீர்பாட்டில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில் பெட்டிகளில் அதிகளவில் பீர்பாட்டில் பெட்டிகளே இருந்தன. தற்போது கோடை காலம் தொடங்குவதால் மது பிரியர்கள் அதிகளவில் பீர் உபயோகப்படுத்துபவர்கள் என்பதால், விலை உயர்ந்த பீர் பாட்டில்களும் டின் பீர்களையும் கடத்தி வந்துள்ளனர்.

* ஒரேவொரு சோதனைச்சாவடி புதுச்சேரியில் இருந்து நேரடியாக சென்னைக்கு செல்வதை விட, புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு செல்வது அதிக கிலோ மீட்டர் கொண்டதாகும். இருப்பினும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் போது 2, 3 சோதனைச்சாவடிகளை கடந்தாக வேண்டும். அப்போது போலீசாரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக, கடலூர் ஆல்பேட்டையில் ஒரே ஒரு சோதனைச்சாவடி மட்டுமே உள்ளதால், கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: