தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் மாதவரம் தோட்டக்கலை பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில், மாதவரம் தோட்டக்கலை பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் தாவரவியல் பூங்கா என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊட்டி தாவரவியல் பூங்காதான். ஊட்டி செல்வோர் கட்டாயம் பார்த்துச் செல்லும் சுற்றுலா தலமாக இது உள்ளது. தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாவரவியல் பூங்கா, தேசிய அளவில் புகழ் பெற்றதாக விளங்குகிறது. ஊட்டி போன்ற குளிர்ப் பிரேதேசங்களில் மட்டுமே இதுபோன்ற தாவரவியல் பூங்காக்கள் சாத்தியம் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், சென்னையிலும் அப்படியொரு பூங்காவை சாத்தியப்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை.

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 2010ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டது. சென்னையின் முதல் தாவரவியல் பூங்கா என்ற பெருமையை இது தன்வசம் வைத்துள்ளது. 20 ஏக்கரில் பச்சைப் பசேலனெ செடி கொடிகளுடன் இன்றளவும் விளங்கி வருகிறது. இதை தொடர்ந்து, மாதவரம் பால்பண்ணை அருகில் 2018ம் ஆண்டு 20 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த தாவரவியல் பூங்கா, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 2வது பெரிய பூங்கா ஆகும். இங்கு 400 வகை தாவரங்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் மிக்க தாவரங்கள், வீட்டு வளர்ப்புச் செடிகள், கண்கவர் வண்ணப்பூக்கள், மூலிகைச் செடிகள் என மொத்தம் 800க்கும் மேற்பட்ட தாவர வகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வேறு எங்கும் இல்லாத 27 நட்சத்திர மரங்களும், இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. ஓலை கீற்றுகளின் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள குடில்கள், மன அழுத்தத்தை குறைக்க பூங்காக்களை நாடும் மக்கள் ஒய்வெடுக்க பயன்படுகிறது. இந்த பூங்காவின் கூடுதல் சிறப்பம்சம், பரிசல் சவாரி. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தில், பரிசலில் பயணம் செய்வது பலருக்கு அலாதியான இன்பத்தை அளிக்கிறது. பசுமை புல்வெளியில் நடைபயணம் மேற்கொள்ள ஏதுவான சுற்றுச்சூழல், எங்கு பார்க்கிலும் ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்கள், அதன் பொந்துகளில் கீச்சிடும் பச்சைக்கிளி கூட்டம் என இந்த பூங்காவை அடிக்கடி கண்டுகளிக்க பல காரணங்கள் உள்ளன.

மூலிகை தாவரங்களின் நடுவில், மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், உண்டு மகிழ கேன்டீன், விளையாடி மகிழ விளையாட்டுச் சாதனங்கள் என குடும்பமாய் பொழுதை கழிக்க விரும்புவோரின் ஆகச் சிறந்த தேர்வாக மாதவரம் தாவரவியல் பூங்கா திகழ்கிறது.  காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் இந்த பூங்காவில், பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 15 நிமிட படகு சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.40ம் சிறியவர்களுக்கு ரூ.20ம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, பூங்காவில் போட்டோஷூட் செய்வதற்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் வருகை புரியும் இந்த பூங்காவை மேம்படுத்த வேண்டும், என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், மாதவரம் தோட்டக்கலை பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  இதில், பூங்காவில் உள்ள நீரூற்றுகள், பூங்கா விரிவாக்கப் பணிகள் உள்ளிட்டவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் பார்வையாளர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

* அரிய வகை மலர்கள் தாவரவியல் படிக்கும் மாணவர்களின் வசதிக்காக இந்த தோட்டக்கலை பூங்காவில் அரிய வகை மலர் செடிகள், மரங்கள் வளர்க்கப்படுகிறது. மேலும், சிறுவர் விளையாட்டு திடல், செயற்கை நீரூற்று, உணவகம், தியான மேடை, நடைபயிற்சி பாதை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. கண்ணாடி மாளிகை உதகை மண்டலத்தில் உள்ள தோட்டத்தில்  உள்ளதை போன்ற கண்ணாடி மாளிகையும், மூலிகைகள், மலர்கள், போன்சாய் மற்றும்  குறுக்கு நெடுக்காக அமைக்கப்பட்ட தட்டி தோட்டங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான  விளையாட்டு பகுதி, அருவிகள் மற்றும் நீரூற்றுகள் உள்ளிட்ட பல்வேறு  வகையான தோட்டங்களுடன் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கிட்டத்தட்ட 150 பேர்  அமரக்கூடிய ஒரு திறந்தவெளி அரங்கம் உள்ளது. தோட்டத்தில் தாவர நாற்றங்கால்  விற்பனை நிலையமும் செயல்படுகிறது.

* பறவைகளுக்கு சிறு பாலம் இந்த தோட்டக்கலை பூங்காவில் மருத்துவ தாவரங்கள், உட்புற தாவரங்கள், கற்றாழை மற்றும் அலங்கார  மரக்கன்றுகள், பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்காக ஒரு பிரிவு என பிரிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பறவைகளை கவரும் வகையில் ஒரு சிறிய  பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்வையாளர்கள் ஏரியை காண முடியும்.

Related Stories: