நெல்லை தாசில்தார் வீட்டில் 285 சவரன் நகை ரூ.29 லட்சம் சிக்கியது: 13 மணி நேரம் ரெய்டில் விஜிலன்ஸ் அதிரடி

நெல்லை: நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் நில எடுப்பு தாசில்தார், அவரது மகள், மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய 13 மணி நேர சோதனையில், ரூ.29 லட்சம், 285 பவுன் நகைகள் சிக்கியது.  நெல்லை மாவட்டம், பாளையங்ேகாட்டை கேடிசி நகர் அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சந்திரன் (57). கங்கைகொண்டான் சிப்காட்டில் நிலம் எடுப்பு தாசில்தாரர். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வருவதாக நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தாசில்தார் சந்திரன் வீட்டிலும், அதே பகுதியில் வசித்து வரும் அவரது மகள்,  தூத்துக்குடியிலுள்ள மகன் வீடு மற்றும் கம்பெனியில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். நேற்று காலை 7 மணியிலிருந்து இரவு  8 மணி வரை 13 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

இதில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தாசில்தார் சந்திரன் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.28 லட்சத்து 91 ஆயிரம் மற்றும் 37 ஆவணங்களும், மகள் வீட்டிலிருந்து 94 ஆவணங்களும், தூத்துக்குடியில் மகன் வீட்டிலிருந்து 55 ஆவணங்களும், அவரது கம்பெனியிலிருந்து 29 ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயரதிகாரிகளுக்கும், நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திக்கேயனுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  தாசில்தார் சந்திரன் வீட்டில் 285 பவுன் தங்க நகைகள் இருந்தது. அவரது மகள் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் மகன் வீட்டில் சுமார் 16 பவுன் தங்க நகைகள் இருந்தது. இவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் பதிவு மட்டும் செய்தனர்.

Related Stories: