வேளாண் பட்ஜெட் 2023-24: ரூ.710 கோடியில் ஊரக சாலை

விவசாய விளைபொருட்களை விவசாயிகளின் வயல்களில் இருந்து அருகிலுள்ள சந்தைக்குக் கொண்டு செல்வதை மேம்படுத்துவதற்காகவும், வேளாண்மைக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகவும் வரும் ஆண்டில் 710 கோடி ரூபாய் செலவில் கிராமப் பஞ்சாயத்துகளில் 2,750 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஊரகச் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ல் 368 கோடி ரூபாயில் கதிரடிக்கும் களம், சேமிப்புக் கிடங்கு, பால் சேகரிப்பு மையம், சிறு பாசனத் தொட்டிகள், குளங்கள், ஊருணிகளின் புத்தாக்கம், புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உயர் மதிப்பு மரக்கன்று

தமிழ்நாட்டில் வேளாண் நிலங்களிலும் மரங்கள் வளர்ப்பது உழவர்களின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறையாகும். அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு, புதிய நாற்றங்கால்கள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படும். உயர்மதிப்புமிக்க மரக்கன்றுகள் வளர்த்து விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்க ஏதுவாக, ஏற்கனவே உள்ள நாற்றங்கால்களுக்கு நிதியுதவி செய்யப்படும். வரும் ஆண்டில், 75 லட்சம் செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதற்கென, ஒன்றிய மாநில அரசு நிதியிலிருந்து ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.

* விவசாயிகளுக்கு அதிக வண்டல் மண் கலெக்டர்களுக்கு விருது

ஏரிகள், குளங்களில்  படிந்துள்ள வண்டல் மண்ணில் மண்வளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளதால் மாநில அரசு, அந்தந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள், குளத்து  வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் வயல்களில் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சென்ற  ஆண்டு 15 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு, 12,500  விவசாயிகள் பயனடைந்தனர். விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன் பெறும் வகையில், காலதாமதம் இன்றி இப்பணியை சிறப்பாக செய்யும் மாவட்ட ஆட்சியர்களுக்கு  விருது வழங்கப்படும்.

* பனை ஆராய்ச்சி நிலையம்

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் புதிய குட்டை ரக பனை மரங்களை உருவாக்கி அவற்றின் நடவுப்பொருட்களை கிடைக்கச்செய்வது, நடவு, ஊட்டச்சத்து, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிமுறைகளை நெறிப்படுத்துவது, நீரா, பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற பனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வதற்கான தர ஆய்வுக்கூடம் அமைத்தல், மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு, தூத்துக்குடி கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கப்படும்.

* இ-வாடகை செயலியில் மெக்கானிக் விபரம்

விவசாயிகள் உழவுப் பணியினைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவிடும் வகையில், தனியாருக்குச் சொந்தமான டிராக்டர்களின் உரிமையாளர்கள், வேளாண் இயந்திரங்கள், பம்பு செட்டுகளின் பழுதுகளை சரி செய்யக் கூடிய தனியார் பழுதுநீக்குபவர்களின் பெயர், விலாசம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் வட்டார, மாவட்ட வாரியாக, இ-வாடகை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உழவன் செயலியோடும் இணைக்கப்படும்.

* 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற திட்டம்

கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

* கிராமத்துக்கு 2 பவர் டில்லர்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நில உடமையினைக் கருத்தில் கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி, தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டமான ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு 2 பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு 43 கோடி ரூபாய் மானியத்தில் 5,000 பவர்டில்லர்கள் வழங்கப்படும்.

* 500 ஊரக இளைஞர்களுக்கு இயந்திர பயிற்சி

டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோவை, திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய 6 இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். ஊரக இளைஞர்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் 6 அரசு வேளாண் இயந்திரப் பணிமனைகளில் ரூ.50 லட்சம் செலவில் 200 ஊரக இளைஞர்களுக்கு பழுது நீக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்த குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படும்.

Related Stories: