வேளாண் பட்ஜெட் 2023-24: 11 மாவட்டங்களில் பசுமை குடில்

பசுமைக் குடில், நிழல் வலைக் குடில் ஆகிய பாதுகாக்கப்பட்ட சாகுபடி மூலம் உயர் மதிப்புள்ள காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றை விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து அதிக வருமானம் பெற முடியும். இவற்றை நிறுவ மானியம் அளிக்கும் வகையில், வரும் ஆண்டில் ரூ.22 கோடி ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

* ஏற்காட்டில் தாவர அலங்கார வடிவம்

ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவிற்கு, ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகின்றனர். மேலும்,  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், தாவர அலங்கார வடிவங்கள் அமைக்கப்படும். தாவர வேலிகளிட்ட நடைபாதைகள், தாவரப் பின்னணிகள், உயிர்ச் சிற்பங்கள் அமைக்க 5  கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* வெளிநாடு செல்லும் 150 உழவர்கள்

அயல்நாடுகள் சிலவற்றில் உயர்ரக தொழில்நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது, அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும். எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* முந்திரி சாகுபடியில் பண்ருட்டிக்கு முன்னுரிமை

தமிழகத்தில் வரும் சாகுபடி பருவத்தில் முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 எக்டரில் நடவு செய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ருட்டி, அருகாமையிலுள்ள பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

* விவசாயிகளுக்கு பரிசுத்தொகை

தமிழ்நாட்டில் நம் மண்ணுக்கே சொந்தமான சுவை மிகுந்த எண்ணற்ற காய்கறி வகைகள் உள்ளன. இந்த ஆண்டைப் போலவே, வரும் ஆண்டிலும் இத்தகைய பாரம்பரிய காய்கறிகளைப் பரவலாக்கம் செய்யும் வகையில், காய்கறி விதைகள் சேகரிக்கப்பட்டு, மரபணு தோட்டங்கள் அமைக்கப்படும். மாவட்டந்தோறும் விதைத் திருவிழா, மாநில அளவில் கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்படும். பாரம்பரிய காய்கறி விதைகளை அதிகளவில் மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அவை விதைப் பொட்டலங்களாக ஆடி, தை பட்டங்களில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யப்படும். வரும் ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

* மினுமினுக்க போகும் மாதவரம்

சென்னை, மாதவரம் தோட்டக்கலைப் பூங்காவிற்கு 2 லட்சம் பேர் ஆண்டுதோறும் வருகை புரிகின்றனர். இப்பூங்காவினை மேலும் அழகுபடுத்தி, பார்வையாளர்களை கவரும் வகையில், இசைக்கேற்ப அசைந்தாடும் நீரூற்றுகள், பூங்கா விரிவாக்கம் போன்றவை ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

* வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.6,600 கோடி ஒதுக்கீடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், வரும் ஆண்டில், ரூ.6,600 கோடி மதிப்பீட்டில் இயற்கை வள மேலாண்மைப் பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க் குட்டைகள், உள்ளிட்ட பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

* செங்காந்தள் மலர் விதை விற்பனை

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், சேலம் மாவட்டங்களில் செங்காந்தள் மலர் விதைளை விற்கப்படும்

* ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி

ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி பாசனப் பரப்புப் பகுதியில் சாகுபடிக்கு உகந்த பகுதிகளில் ஒருங்கிணைந்த நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளை சோதனை முறையில் 960 எக்டர் பரப்பளவில் தொகுப்பு முறையில் ஏற்படுத்திட புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கிடைக்கும் நீரினை திறம்பட உபயோகித்து, ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் கீழ்பவானி பகுதியிலுள்ள தொட்டம்பாளையம், அக்கரைநெகமம், கரிதோட்டம்பாளையம், பூசாரிப்பாளையம் போன்ற ஆயக்கட்டுப் பகுதிகளில் காய்கறிகள், மஞ்சள், வாழை போன்ற தோட்டக்கலை பயிர்கள் பயிரிட நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம் 2 ஆண்டுகளில் தோராயமாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* ஆறுகளில் மீன் உற்பத்தி அதிகரிக்க திட்டம்

ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுவதன் மூலம் நாட்டின் மீன் வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும். ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆறுகளில் மீன் உற்பத்தி அதிகரிப்பதுடன் ஆறுகளை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும்.

* உலக சந்தையில் தேனி வாழை

வாழையின் உற்பத்தித்திறனில், தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தேனி மாவட்டத்தில், வாழைக்கென தனி அடையாளம் உருவாக்கி உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் விதத்தில், வாழைக்கென்று ஒரு தனி தொகுப்புத் திட்டம் 130 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

* ரூ.90 கோடியில் தூர்வாரும் பணி

நீர்வளத் துறையின் மூலம் கால்வாய்கள் சீரமைப்பு, ஏரிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள் உழவர்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* விவசாய மாணவர் சுற்றுலா

வேளாண் செயல்பாடுகளை மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். மாணவ சமுதாயத்துக்கு இந்த சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும். இத்திட்டம் 1 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

* பனை மேம்பாட்டு இயக்கம்

பனை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் போன்ற பொது இடங்களில் நடவு செய்ய 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பனைப் பொருட்களின் மதிப்புக்கூட்டல் ஊக்குவிக்கப்படும். விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டலுக்கான கொட்டகை, பாதுகாப்பாக மரம் ஏறுவதற்குரிய உபகரணங்கள் வழங்கப்படும். பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் பனை வெல்லம், பனங்கற்கண்டு, பிற பனை சார்ந்த பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுவதோடு, மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். இது ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும்.

Related Stories: