4 ஆண்டில் பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் அரசியலில் திருப்பம்: ஓட்டம் பிடித்த கூட்டணி கட்சிகளை இழுக்கும் பாஜக.! 2024 மக்களவை தேர்தலுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது

புதுடெல்லி: கடந்த 4 ஆண்டில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை பாஜக தலைமை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, தனிப்ெபரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டிருந்தாலும், கடந்த 4 ஆண்டில் 3 கூட்டணி கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. அந்தவகையில் பீகாரில் லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்), ஐக்கிய ஜனதா தளம்  (பீகார் முதல்வர் நிதிஷ்குமார்), கோவாவில் விஜய் சர்தேசாயின் கோவா  பார்வர்டு கட்சி, மேற்குவங்கத்தில் கூர்க்காலாந்து கோரும் கூர்க்கா  ஜனமுக்தி மோர்ச்சா, ராஜஸ்தானின் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி, பஞ்சாபில்  சிரோமணி அகாலி தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் அணி) போன்ற கட்சிகளை குறிப்பிட  முடியும்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவும் பாஜகவும் மக்களவை தேர்தலில் இணைந்து  போட்டியிட்டு 48 இடங்களில் 41 இடங்களைக் கைப்பற்றின. ஆனால் கடந்த  ஓராண்டிற்கு முன் மகாராஷ்டிராவில் நடந்த சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு  கவிழ்க்கப்பட்டது. சிவசேனா இரண்டாக உடைந்தது. தற்ேபாது பாஜகவுடன் இணைந்து  சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில்  கடந்த 2019 தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து  தேர்தலில் போட்டியிட்டது. ராம்விலாஸ் பஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவரது  மகனான சிராக் பஸ்வான் 2020ல் நடந்த தேர்தலின் போது தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் இருந்து விலகி பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அதன்பின்னர் சிராக் பஸ்வானுக்கும், அவரது மாமா பசுபதி பராஸூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பசுபதி பராஸ், தனது ஆதரவு  எம்பிக்களுடன் இணைந்து தனி பிரிவாக செயல்பட்டு வருகிறார். மேலும் அந்த  எம்பிக்கள் பாஜகவை ஆதரித்து வருகின்றனர். அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக - லோக்ஜன சக்தி கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதியில் 39 தொகுதியை கைப்பற்றியது. தற்போது இரு கட்சிகளும் பாஜகவில் இருந்து வெளியேறியதால், பீகாரில் பாஜகவின் நிலைமை மோசமாகிவிட்டது.

பஞ்சாப்பில் கடந்த 2019 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த சிரோமணி அகாலிதளம் (இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி), 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில்  தனித்து போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் வரும் 2024 லோக்சபா தேர்தலில், ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளை கொண்டு கூட்டணி அமைக்க பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. மேலும் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை பாஜக தலைமை தொடங்கியுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து, 2024 தேர்தலை எதிர்கொள்வோம். பீகாரில் லோக் ஜனசக்தி, பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டன. அந்த கட்சிகளுடன் சேர்த்து மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இழுக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் போது ெவற்றிப் பெற்ற இடங்களை மீண்டும் கைப்பற்ற புதிய யுக்திகள் கையாளப்படுகிறது. மற்ற மாநிலங்களில் பாஜகவுடன் ஒத்துபோகும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: