சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையாக செயல்பட்ட வயதான நபரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

* மதுபோதையில் மாநகர பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து, மாற்று பேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்த உதவி ஆணையாளர்

இராயப்பேட்டை உதவி ஆணையாளர் திரு.S.சார்லஸ் சாமராஜ்துரை அவர்கள், 16.03.2023 அன்று இரவு இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற மாநகர பேருந்து தடம் எண்.5C என்ற பேருந்தில் பயணிகள் கூச்சலிட்டபோது, உதவி ஆணையாளர் பேருந்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்றதால், உதவி ஆணையாளர் விரட்டிச் சென்று அந்த பேருந்தை நிறுத்தியபோது, பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும், பேருந்தை தாறுமாறாக ஓட்டி செல்வதாகவும் பயணிகள் தெரிவித்தனர். உடனே, உதவி ஆணையாளர் விசாரணை செய்து, Breathing Analyser மூலம் பேருந்து ஓட்டுநரை பரிசோதித்ததில், மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், ஓட்டுநர் மீது மதுபோதையில் இருந்ததற்காக DD வழக்கு பதிவு செய்து, மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து, பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தார்.

* காசிமேடு பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த 3 நபர்கள் கைது. 20.45 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல்

இராயபுரம் உதவி ஆணையாளரின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு.G.செல்வகுமார் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.K.ராஜவேல், முதல்நிலைக் காவலர்கள் M.சதாம் உசேன் (மு.நி.கா.30254) R.ரஞ்சித்பிரதாப் (மு.நி.கா.47048) மற்றும் காவலர் J.பசும்பொன்ராம் (கா.57917) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 15.03.2023 அன்று காலை, மீன்பிடி துறைமுகம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, மீன்பிடி துறைமுகம், டோல்கேட் சந்திப்பில் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்தி வந்த 1.ஈஸ்வர பிரசாத், வ/38, த/பெ.நானையா, பைபாஸ் ரோடு, பளிகாட்டம் கிராமம், நரசிபட்னம் தாலுகா, விசாகப்பட்டினம், ஆந்திரா மாநிலம், 2.வெங்கடபதி ராஜு, வ/30, த/பெ.சாசம்ராஜு, மர்லபட்டு கிராமம், கல்லூர் தாலுகா, தெலுங்கானா மாநிலம், 3.சிவகுமார், வ/42, த/பெ.பிக்சாபதி, அன்மகண்டா, வாராங்கல், தெலுங்கானா மாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ 450 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

* நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிறைக்கைதிக்கு கஞ்சா கொடுத்த நபரை பிடித்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர்

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.S.முருகேசன், என்பவர் 03.03.2023 அன்று புழல் சிறையில் இருந்து அன்சாரி பாஷா என்ற கைதியை, வழிக்காவல் செய்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு நபர் மேற்படி கைதிக்கு கஞ்சா பொட்டலம் கொடுக்க முற்பட்ட போது, மேற்படி உதவி ஆய்வாளர் முருகன் எதிரியை பிடித்து, விசாரணை செய்து, பிடிபட்ட எதிரி பாபு (எ) சரத்பாபு, வ/27 என்பவரை, கஞ்சா பொட்டலத்துடன்,  B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

* வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் சென்ற கழிவுநீரை சரிசெய்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படால் பணி செய்த தலைமைக் காவலர்.

H-1 வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய, தலைமைக் காவலர் திரு.R.ரவிகுமார் என்பவர் கடந்த 06.03.2023 அன்று வண்ணாரப்பேட்டை, MC சாலை சந்திப்பில் பணியில் இருந்தபோது, அங்கு அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் வடிந்து வந்துள்ளது. உடனே தலைமைக் காவலர் ரவிகுமார் கழிவுநீர் அடைப்பை தனது கையால் சரிசெய்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். இவரது செயலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி, இவரது நற்செயலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.

* குதிரையேற்ற போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்ற முதல் நிலைக்காவலர்கள்.

கடந்த 11.02.2023 மற்றும் 12.02.2023 ஆகிய நாட்கள், சோழிங்கநல்லூரில் CEC கிளப் சார்பில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில், சென்னை பெருநகர காவல் குதிரைப்படையைச் சேர்ந்த முதல்நிலை பெண் காவலர் P.சுகன்யா (மு.நி.கா.30226) என்பவர் ஒரு பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றார். இதே போல, 18.02.2023 மற்றும் 19.02.2023 அன்று ஹிந்துஸ்தான் கல்லூரியில் 3rd Dr. KCG Verghese Trophy குதிரையேற்ற போட்டியில், Show Jumping பிரிவில் சென்னை பெருநகர காவல், குதிரைப்படையைச் சேர்ந்த முதல்நிலை பெண் காவலர் P.சுகன்யா (மு.நி.கா.30226) என்பவர் தங்கப்பதக்கமும்,  முதல்நிலைக் காவலர் R.மணிகண்டன் (மு.நி.கா.40209) என்பவர் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.

* H-6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் M.லோகேஷ் (கா.53033) என்பவர் கடந்த 08.03.2023 அன்று ஆர்.கே நகர், படேல் நகர், 1வது தெருவில் H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய காவலர் M.லோகேஷ் (கா.53033) என்பவர் கடந்த 07.03.2023 அன்று இரவு பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 02.00 மணியளவில் (08.03.2023) பட்டேல் நகர் 1வது தெருவில் ரோந்து சென்றபோது, 2 நபர்கள் காவலரை பார்த்ததும் ஓடவே, காவலர் லோகேஷ் துரத்திச் சென்று ஒரு நபரை பிடித்து விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் கௌதம் (எ) ஓட்டேரி, வ/19, பட்டேல் நகர் என்பதும், தப்பிச் சென்ற நபர் அவருடைய கூட்டாளி தனுஷ் என்பதும் இருவரும் சேர்ந்து அப்பகுதியிலுள்ள 2 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது. அதன்பேரில், கௌதம் (எ) ஓட்டேரி என்பவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அவர் கொடுத்த தகவலின்பேரில், தப்பிச் சென்ற எதிரி தனுஷ் என்பவரையும் பிடித்து இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். மேலும் விசாரணையில இவர்கள் P-3 வியாசர்பாடி காவல் நிலைய எல்லையில் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளதும் தெரியவந்தது.

* சாலையில் கிடந்த 1.5 சவரன் தங்க நகைகயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மோகன் என்பவருக்கு பாராட்டு.

சென்னை, இராயப்பேட்டை, தலையாரி தெருவில் வசிக்கும் C.மோகன், வ/64 என்பவர் தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மோகன் கடந்த 17.03.2023 அன்று காலை, ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள நீல்கிரிஸ் அருகிலுள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு வெளியே வரும்போது, சாலையில் தங்க பிராஸ்லேட் இருப்பதை கண்டு எடுத்து அங்கு இருந்தவர்களிடம் விசாரணை செய்தார். யாரும் உரிமை கோராததால், மோகன் மேற்படி தங்க நகையை E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். E-1 மயிலாப்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை செய்து, மேற்படி 1.5 சவரன் எடை கொண்ட தங்க பிராஸ்லேட்டின் உரிமையாளரை கண்டுபிடித்து, அவரிடம் தங்க நகையை ஒப்படைத்தனர்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த, மனித நேயத்துடன் பொதுமக்களுக்கு உதவிய 11 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையுடன் செயல்பட்ட  நபர் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Related Stories: