திமுக ஆட்சியை குறை கூறியவர்களுக்கு நிதிநிலை அறிக்கை மூலம் முதல்வர் பதிலடி: அமைச்சர் சாமிநாதன் பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நேற்று மாலை  புலமை போற்றும் தலைமை என்ற பெயரில் கவியரங்க நிகழ்ச்சி சென்னை ஜிகேஎம் காலனி 30வது தெரு பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் நடந்தது. சிறப்பு விருந்தினரான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கவியரங்கத்தை தொடங்கி வைத்தார். இதில் மேயர் பிரியா, மண்டலக்குழு தலைவர் சரிதா மற்றும் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார் செய்திருந்தார். நிகழ்ச்சியில், கவிவேந்தர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவிஞர் கபிலன், கவிஞர்கள் யுகபாரதி, கங்கை மணிமாறன், மானசீகன், ஜான்தன்ராஜ் ஆகியோர் முதல்வரின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கவிதை நடையில் உரையாற்றினர்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘முதல்வர் வரலாறு சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை மக்கள் மத்தியில் தாக்கல் செய்துள்ளார். அரசு சார்பில் முதல்வர் சமர்ப்பிக்கக்கூடிய நிதிநிலை அறிக்கையில் சிலர் எதிர்மறை கருத்து தெரிவித்து வந்தாலும், இந்தமுறை முதல்வர் அறிவித்த நிதிநிலை அறிக்கையில் எந்த ஒரு எதிர்மறை கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை. இல்லத்தரசிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம்தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதை அனைத்து மகளிரும் வரவேற்றுள்ளனர்’ என்றார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘சமுதாய முன்னேற்றத்திற்காகவும், விளிம்புநிலை மக்களை தூக்கிவிடுவதற்காகவும் தொடங்கப்பட்டதுதான் திமுக. சில பேர் கேட்கலாம், திமுக என்ன செய்தது என்று. அதுபற்றி சொல்வதற்கு இன்று அதிகளவில் நம்மிடம் பட்டியல் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததைபோல பல திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இதில் மிகவும் முக்கியமானது இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இது, செப்டம்பர் முதல் வழங்கப்படும் என கூறி முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக ஆட்சியை குறை கூறியவர்களுக்கு நிதிநிலை அறிக்கை மூலம் முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். குறைகூறுபவர்கள் தங்களது பெட்டிகளை கட்டிக்கொண்டு ஓடவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.

Related Stories: