வேங்கைவயல் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உயர்நீதிமன்றம் முடிவு..!!

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்றும், இந்த வழக்கை முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருவதாகவும், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதி என்பது இன்னுமா தொலைதூர கனவாக இருப்பதாகவும், பட்டியலின மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. வேங்கைவயல் வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த தமிழ்நாடு அரசு 147 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பின்னர், நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்க உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ள நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தையடுத்து இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடாமல் உத்தரவுக்காக தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.

Related Stories: