திருமண்டங்குடி சிவாலயத்தில் 13ம் நூற்றாண்டு அரியவகை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

திருவிடைமருதூர் : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி சிவாலயத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை படைப்பு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக் குடி சுவாமிகள் திருவிடைமருதூரில் கூறியதாவது: ஆண்களின் வீரச்செயலை போற்றும் வண்ணம் பண்டைய காலங்களில் நடுகல் வழிபாடு என்பது இருந்துள்ளது. இன்றும் பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் புடைப்பு சிற்பங்கள் மூலமாக நாம் இதனை காண்கிறோம்.

அதுபோல பெண்களின் வீரத்தை போற்றும் மிகப்பெரிய ஒரு அடையாளம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தை அடுத்த திருமண்டங்குடி திருபுவனேஸ்வர சுவாமி கோயில் கருவறை கோமுகியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய சிற்பமாகும். இக்கோயிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. அதை பார்க்க சென்றபோது இத்தகைய புடைப்பு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நடுகல் சிற்பங்களில்ஊர் மக்களை காக்கும் பொருட்டு, ஆண்கள் கையில் ஆயுதம் ஏந்தி விலங்குகளை தாக்குவது போன்று அல்லது எதிரிகளை தாக்குவது போன்று சிற்பங்கள் இருக்கும். ஆனால் பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தியவாறு அமைந்த சிற்பங்கள் மிகவும் அரிதானது.

அப்படி ஒரு சிற்பம்தான் திருமண்டங்குடி திருபுவனேஸ்வரர் கோயில் மூலவர் கருவறை கோமுகியில் அமைந்துள்ளது. இதில் யாழி ஒன்று யானையை துரத்த, யானை குதிரையை துரத்த, ஒரு பெண் பயந்து மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப்பன்றி போன்ற ஒரு விலங்கை கழுத்தில் தாக்கும் காட்சி கோமுகியில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. இதில் மறுபுறத்தில் பரதநாட்டியம் மற்றும் கலைகளுடன் கூடிய பெண்களின் சிற்பங்களும், சங்கநாதம் செய்யும் சிவ கணங்களும் வரிசையாக உள்ளனர். இதுவும் நடுகல் சிற்பம் வகையைச் சார்ந்ததாக இருக்கலாம்.

3ம் ராஜராஜன் (13ம் நூற்றாண்டு) காலத்தில் அமையப்பெற்ற கல்வெட்டுகளுடன் கூடிய இந்த கோயில் சோழர்கால திருப்பணி கொண்டதாகும். கோயில்களில் மற்ற இடங்களில் இதுபோன்ற சிற்பங்களை சாதாரணமாக நாம் பார்க்கலாம். பெண்மையின் கலைகளையும், வீரத்தையும் எந்த அளவுக்கு போற்றியிருந்நால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில் மக்கள் வழிபடுமிடத்திலேயே அமைத்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு சுவாமிகள் கூறினார்.

Related Stories: