மாவட்ட மீன் வளத்துறை சார்பில் பைக்காரா அணை, ஓடைகள், நீர்நிலைகளில் இரண்டு லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

ஊட்டி : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஊட்டி பைக்காரா அணை மற்றும் பிற ஓடைகள், நீர்நிலைகளில் 2 லட்சம் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன.

மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமானத்தை பெருக்கும் வகையில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மீன் உற்பத்தி, தரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஆற்று நீர் நிலைகளில் சாதா கெண்டை மீன் குஞ்சுகளின் வளத்தை பெருக்க திட்டமிட்டு ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் 2 லட்சம் சாதா கெண்டை மீன் குஞ்சுகளை ஆறுகளில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பவானிசாகர் மற்றும் ஊட்டி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர்கள் ஜோதிலட்சுமணன், கதிரேசன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை நீர் தேக்கத்தில் விடுவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆறுகளில் மீன்பிடிப்பவர்கள், நீர்நிலை கரையோரங்களில் தூண்டில் வீசி மீன் பிடிப்பவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளில் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்தில் அணைகள், ஓடைகளில் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. பைக்காரா அணை மற்றும் டிஆர்., பஜார் நீரோடையில் 60 ஆயிரம் சாதா கெண்டை மீன் குஞ்சுகளும், காந்தல் கால்வாய், கவர்னர்சோலை, கிளன்மார்கன் பகுதியில் உள்ள நீரோடைகள், தலைக்குந்தா பகுதியில் உள்ள நீர்நிலை உள்ளிட்ட இடங்களில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. மொத்தம் இரு லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.முன்னதாக, கடந்த மாதம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக டிரவுட் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

Related Stories: