அதிக வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி‘அம்ரோ கிங்ஸ்’ நிறுவன இயக்குநர்கள் 3 பேர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: ரூ.1 லட்சத்திற்கு மாதம் ரூ.9 ஆயிரம் வட்டி தருவதாக 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி ெசய்த வழக்கில் ‘அம்ரோ கிங்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு ‘அம்ரோ கிங்ஸ் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் இயக்குநர்களாக ராஜராஜன், அவரது மனைவி முத்துலட்சுமி ராஜராஜன், ரஞ்சித்குமார் இருந்தனர். இந்த நிறுவனத்திற்கு திருவள்ளூர், திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனத்தின் பெயரில் நட்சத்திர ஓட்டல், மளிகை மொத்த வியாபாரம் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு இந்த நிறுவனம் சார்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதன்படி பொதுமக்கள் பலர் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சொன்னபடி மாதம் ரூ.9 ஆயிரம் வட்டி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் ‘அம்ரோ கிங்ஸ் லிமிடெட்’ நிறுவனத்திற்கு நேரில் சென்று தகராறு செய்தனர். இதை தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர்களான ராஜராஜன், அவரது மனைவி முத்துலட்சுமி ராஜராஜன், ரஞ்சித்குமார் ஆகியோர் திடீரென தங்களது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது, பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், பல கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஐஜி ஆசியம்மாள் ேமற்பார்வையில் டிஎஸ்பி கபிலன், இந்த வழக்கை விசாரித்தார். அதில், ‘அம்ரோ கிங்ஸ் லிமிடெட்’ நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம் அதிக வட்டி தருவதாக ரூ.161 கோடி பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. அதன் இயக்குநர்கள் ராஜராஜன், முத்துலட்சுமி ராஜராஜன், ரஞ்சித்குமார் ஆகியோர் மீது கடந்த 16ம் தேதி ஐபிசி 120 (பி), 406, 420 உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர்கள் 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோசடி பணம் குறித்தும், அவற்றை மீட்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: