போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த 3 பேருக்கு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ‘எல்.எஸ்.டி ஸ்டாம்ப்’என்ற போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில்,  சென்னையை சேர்ந்த ஒருவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை அருகே, ‘எல்.எஸ்.டி ஸ்டாம்ப்’ எனும் போதைப் பொருள் தடவிய ஸ்டாம்ப் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அங்கு அதிகாரிகள் 2018 ஜனவரி 4ம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டபோது மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த சந்திரசேகர் (20),  மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆஷிஷ் (21),  கொளத்துாரை சேர்ந்த அக்‌ஷய குமார் (21) ஆகியோரிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் எல்.எஸ்.டி என்ற போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார்  3 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.சீனிவாசன் ஆஜரானார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, ‘எல்.எஸ்.டி., எனும் ‘லைசர்கைட்’ ஒரு போதைப்பொருள் மூளையை அதிகமாக தூண்டி, சிந்தனை, கவனம், உணர்வுகள் மற்றும் மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. இது, தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சந்திரசேகருக்கு  நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும்,  ஆஷிஷ், அக்‌ஷயகுமாருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.30 ஆயிரம் அபதாதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: