சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹாலை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள விக்டோரியா மஹால், 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும். இது, சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டிடம். சென்னையில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. 1882ல் சென்னையில் வசித்து வந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி, மெட்ராஸ் நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். அதன்படி, 1883ல் பீப்பிள்ஸ் பார்க் என்ற பகுதியில் இருந்து 3.14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீ பவுசபதி அனந்த கஜபதி ராஜூ இந்த கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

2 மாடி கொண்ட இக்கட்டிடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த  கோபுரத்தின் உயரம் 34 மீட்டர்  ஆகும். 2021-22ம் ஆண்டிற்கான சட்டமன்ற பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கையின் விவாதத்தின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் பழமை வாய்ந்த விக்டோரியா மஹால் அதன் தொன்மை மாறாமல் பொலிவுடன் புனரமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ்,  ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் விக்டோரியா மஹாலை, அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும்  பணியினை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்  நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து,  அமைச்சர்கள்  விக்டோரியா மஹாலை பார்வையிட்டு ஆய்வு செய்து, புனரமைப்பு பணிகள் குறித்த  காணொலி காட்சியினைப் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு,  மேயர்  பிரியா, துணை மேயர் மகேஷ் குமார்,  நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்  பரந்தாமன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்  சிங் பேடி,  கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விக்டோரியா மஹாலின் முழுக் கட்டிடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது  பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும்  மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டிடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல், கலைநயத்துடன் கூடிய முகப்பு விளக்குகள் அமைக்கும் பணி, இயற்கையை  ரசிக்கும் வகையில்  புல் தரைகள் அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார்  கூறுகையில், ‘‘விக்டோரியாக மஹாலை பாதுகாத்து புத்துயிர் அளிக்கும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மறுசீரமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகர அருங்காட்சியகம் அமைத்தல், நினைவு பரிசு அங்காடிகள் அமைத்தல் மற்றும் கட்டிடத்திற்கு வெளியே புல் தரைகளை அமைத்தல் போன்ற பணிகள் உள்ளடங்கும். இதற்காக  கடந்த மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விக்டோரியா மஹால் புனரமைப்பு பணிக்கான கலந்தாலோசகர்களால் வழங்கப்படும் விரிவான திட்ட அறிக்கையில் அதன் முழுமையான உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் (பொது), தலைமைப் பொறியால் (கட்டிடம்), தலைமைப் பொறியாளர் (திட்டம்), செயற்பொறியாளர் (கட்டிடம்), செயற்பொறியாளர்(திட்டம்), சென்னை சீர்மிகு நகரத் திட்ட முதன்மைச் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் கண்காணிப்பாளர், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: