சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம்: ரயில்ேவ கோட்டம் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 74 ரயில் நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை சென்னை ரயில்வே கோட்டம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம்  வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், வரும் வாரங்களில் சென்னை ரயில்வேயின்  லட்சக்கணக்கான பயணிகளுக்கு விரைவாக டிக்கெட்டுகளை வழங்குவதற்காக 74 நிலையங்களில், 96 கூடுதல் ஏடிவிஎம்களை அறிமுகப்படுத்துகிறது. ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்  கோட்டம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பயணிகளின் தேவைக்கு ஏற்ப,  ரயில் நிலையங்களில் ஏடிவிஎம்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 34 இயந்திரங்களில் இருந்து 130 எந்திரங்களாக உயர்த்தி வருகிறது.

இந்த புதிய ஏடிவிஎம்கள் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை விரைவாகவும் வசதியாகவும் வாங்குவதற்கு உதவுவதோடு, கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை வெகுவாகக் குறைக்கும். ஏடிவிஎம்மை பயன்படுத்தும் முறை  பயணிகளுக்கு ஏற்றவாறு இருப்பதால், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் பதிவு செய்ய முடியும். ரயில்வேயால் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகள், யு.பி.ஐ  பயன்பாடுகள் வழியாகவும் கியூ ஆர் குறியீடு போன்ற பல்வேறு கட்டண முறைகளைப் பயன்படுத்தி டிக்கெட் பெற அவை எளிதானவை. இதன் மூலம் நடைமேடை டிக்கெட்டுகள், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வாங்கவும் சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கவும் முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: