குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வாழ்வில் சுயமாக முன்னேற வழிவகுக்கும்: பெண்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும், என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு வரவேற்பு தெரிவித்து பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

கவிதா ராணி, குடும்பத் தலைவி, மேற்கு தாம்பரம்:  தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என உறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளார். இதன்மூலம் மாதம்தோறும் தங்களது அத்தியாவசிய தேவைக்கு அரசு வழங்கும் பணம்  உதவியாக இருக்கும். தமிழக முதல்வரின் இந்த உதவி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். இந்த திட்டம் பெண்கள் ஒன்றியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்திய தமிழக முதல்வருக்கு அனைத்து குடும்ப தலைவிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அமிர்தவள்ளி, குடும்ப தலைவி, கொடுங்கையூர்: சாதாரண நடுத்தர குடும்பத்தினருக்கும், கீழ் மட்டத்தில் உள்ளவருக்கும் இந்த ரூ.1000 உதவித்தொகை என்பது மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். சமீப காலமாக காஸ் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக நடுத்தர மக்கள் மற்றும் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஸ் மானியம் முறையாக வருவது கிடையாது. எனவே இந்தத் தொகையை அதனோடு ஒப்பிட்டால், கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக கணவனை இழந்த பெண்கள் மற்றும் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றும் பெண்களுக்கு இது பேருதவியாக இருக்கும். கோ.ஜமுனாராணி, நங்கநல்லூர்:  அரசின் இந்த ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு வறுமையில் வாடுவோர், உறவினரை நம்பி இருப்போர் ஆகிய பெண்களுக்கு உதவியாக, தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும். நமது வீட்டில் உள்ளவர்போல் சிந்தித்த முதல்வருக்கு நன்றி. யாரிடமும் கையேந்தி கூனிக்குறுகி நிற்க வேண்டிய நிலை பெண்களுக்கு இனி வராது. பூங்கொடி, குடும்பத் தலைவி, எர்ணாவூர்: உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இது எங்களுக்கான உதவித்தொகையாக நினைக்காமல், யாருடைய தயவும் இல்லாமல் தமிழக அரசே எங்களுக்கு ரூ.1000 வழங்குவது சமுதாயத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமாக நாங்கள் கருதுகிறோம். பெண்களின் நலனுக்காக திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். காஞ்சனா, குடும்பத் தலைவி, தண்டையார்பேட்டை: தமிழக அரசு தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் உள்ளது. ஒன்றிய அரசு பெட்ரோல், காஸ் விலையை உயர்த்திவரும் நிலையில், இந்தத் திட்டம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்குதான் எங்களுடைய வாக்கு. தேவி, இல்லத்தரசி, திருவேற்காடு: விலைவாசி உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். ஏழைகள், அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த தொகை பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டத்தின் பயன் உரியவர்களுக்கு போய் சேர வேண்டும். அப்போது தான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். பெண்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை வகுத்து செயல் படுத்தி வரும் இந்த ஆட்சிக்கு மற்றுமொரு கிரீடமாக இந்த அறிவிப்பு ஜொலிக்கும்.

எஸ்.அலமேலு, வீட்டு வேலை செய்பவர், மேடவாக்கம்: தேர்தல்  அறிக்கையில் சொன்னது போல், பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது ஏழைப் பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு ஏழை குடும்ப பெண்கள் அனைவரையும் கவுரவமாக வாழ வழிவகுக்கும் முதல்வருக்கு நன்றி. தேவி, குடும்பத் தலைவி, புழல்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதமாதம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில், நிதிநிலை அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் சார்பில், அனைத்து குடும்ப தலைவிகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறோம்.

ரஞ்சினி, இல்லத்தரசி, கே.கே நகர்:  விலைவாசி உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை வரவேற்கிறோம். ஏழைகள், அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த தொகை பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டத்தின் பயன் உரியவர்களுக்கு கண்டிப்பாக போய் சேர வேண்டும். பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை வகுத்து செயல் படுத்தி வரும் இந்த திமுக ஆட்சிக்கு மற்றுமொரு கிரீடமாக இந்த அறிவிப்பு ஜொலிக்கும்.

Related Stories: