திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, தொழிற்சாலை கழிவை 2 வாரங்களில் அகற்ற வேண்டும்: தாம்பரம் மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை இரண்டு வாரங்களில் அகற்றும்படி தாம்பரம் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேரந்த சமூக ஆர்வலர் உதயகுமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது நைனா ஏரி. இந்த ஏரியை தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து உள்ளன.

தொழிற்சாலையின் கட்டுமான கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் ஏரியின் நீர் ஆதாரம் கெட்டுப்போகிறது.

 

தற்போது அனுமதியின்றி மருத்துவக் கழிவுகளும் ஏரியில் கொட்டப்படுவதால் குடிநீர் மாசு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாம்பரம் மாநகராட்சி ஆகியவற்றிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளையும், தொழிற்சாலை கழிவுகளையும் தாம்பரம் மாநகராட்சி அகற்ற வேண்டும். மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்பான விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாம்பரம் மாநகராட்சி ஆகியவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: