காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி: 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர்

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவதும், அவர்களின் வளர்ச்சித் தடைபடுவதும் தெரியவந்தது. பல குழந்தைகள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதால், அவர்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும் வாய்ப்பு இருப்பதை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்ள், சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான கனவுத் திட்டமான ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை’ கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் நாளன்று மதுரையில் தொடங்கி வைத்து, வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும், 193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: