பொதுமக்கள் நலனை மேம்படுத்தும் பட்ஜெட்: தலைவர்கள் புகழாரம்

சென்னை: தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு,  பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதை மனதார பாராட்டுகிறேன். ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழ்நாடு  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள  ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவு விரிவாக்கத் திட்டம், வளமிகு  வட்டாரங்கள் திட்டம் ஆகியவை வரவேற்கத்தக்கவை. முதன்மைத்  தேவைகளான வேலைவாய்ப்பு மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து எந்த  அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

வைகோ (மதிமுக பொது செயலாளர்): மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. செப்டம்பர் 15ம் தேதி  முதல் இந்தத் திட்டம் தொடங்கவும், இந்த திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):  பட்ஜெட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500  கோடி நிதி ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி  ஒதுக்கீடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ.3513 கோடி  ஒதுக்கீடு, காவல்துறைக்கு ரூ.10,812 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு  துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்):  மகளிருக்கு  மாதம் ரூ.1000 வருகிற செப்டம்பர் மாதம் 15ல் இருந்து அளிக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை அனைவருக்கும் பாரபட்சமின்றி, எந்த  கோட்பாடுகளும்; வழங்க வேண்டும். கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்): பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பதும், தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியவை. தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, நிலைக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  

இரா.முத்தரசன்(சிபிஐ மாநில செயலாளர்): குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை மாதம் ரூ1000 வழங்கப்படும் என்று அளித்த உறுதிமொழியை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி மேலாண்மை செய்வதில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டது நிர்வாகத் திறனுக்கு சான்றாக அமைந்துள்ளது. விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்): 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திருப்பது வரவேற்புக்குரியது.

மகளிருக்கான உரிமைத்தொகை தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் மாதத்திலிருந்து 1000 ரூபாய் என அறிவித்திருப்பதும், ஆரம்பப் பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கின்றது. விவசாயிகளின் ரூ.2,200 கோடி விவசாய கடன்களை ரத்து செய்திட ஒதுக்கியிருப்பதும் வரவேற்புக்குரியது. இதுபோல சரத்குமார் (சமக தலைவர்), நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ தலைவர்) உள்ளிட்ட தலைவர்களும் பட்ஜெட் குறித்த கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: