திருப்போரூர் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை புறவழிச்சாலைக்கு இடம் மாற்றம் செய்ய கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் ஓஎம்ஆர்  சாலையில் பேருந்து நிலையம், ரவுண்டானா, மாமல்லபுரம் சாலை ஆகிய மூன்று  இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த மூன்று மதுபான கடைகளை  கடந்துதான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி  ஆகியவற்றுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் செல்ல வேண்டியநிலை உள்ளது. மேலும்,  பேருந்து நிலையம் அருகில் இருப்பதால் பல்வேறு கிராமப்புற பகுதிகளில்  இருந்து வரும் பொதுமக்கள் சென்னை, தாம்பரம் செல்வதற்காக காத்திருக்க  வேண்டிய நிலை உள்ளது. பேருந்து நிலையத்தின் அருகிலும், ரவுண்டானா அருகிலும்  மதுக்கடைகள் உள்ளதால் குடிமகன்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்கள்  கிண்டல் செய்து உதை வாங்குகின்றனர்.

இதன் காரணமாக, பேருந்துக்காக  காத்திருக்கும் பெண்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். தற்போது,  ஓஎம்ஆர் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலவாக்கத்தில்  இருந்து ஆலத்தூர் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால்,  திருப்போரூர் நகர பகுதிக்குள் இயங்கும் மூன்று மதுக்கடைகளையும் புறவழி  சாலைக்கு மாற்ற வேண்டும் என்ற இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து  உள்ளனர். இவ்வாறு புறவழிச்சாலையில் மதுக்கடைகளை மாற்றுவதன் மூலம்  பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு  ஏற்படுவதோடு காவல் துறை பாதுகாப்பும் தேவைப்படாது என்று சமூக ஆர்வலர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர். 

Related Stories: