குறுஞ்செய்தி லிங்க்கை தொட்ட தனியார் ஊழியரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற குறுஞ்செய்தியில் இருந்த லிங்க்கை தொட்ட தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை வானகரம் சக்தி நகரை சேர்ந்தவர் ரகுராம் (40). இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து,  ஒரு நம்பரில் இருந்து பேசிய நபர், ‘‘பிரபல தனியார் வங்கியின் மேலாளர் பேசுகிறேன். உங்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கை தொட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம், என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய ரகுராம் அந்த லிங்க்கை தொட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி வந்தது. இதனால், ரகுராம் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர். பின்னர், இது ஆன்லைன் மோசடி என்பதால், இந்த புகாரை அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இதுகுறித்து, அண்ணாநகர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கூறும்போது, ‘‘ஆன்லைன் வாயிலாகவோ, செல்போன் மூலம் குறுந்தகவல் வந்தாலோ எந்தவொரு லிங்க்கையும் தொட்டு பார்க்க கூடாது என,  பலமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகிறோம். வங்கியின் மேலாளர் பேசுவதுபோல் பேசி தற்போது பணம் மோசடி செய்துள்ளனர். எனவே ஆன்லைன் வாயிலாக வரும் குறுந்தகவல் மற்றும் லிங்க்கை தொடவேண்டாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்,’’ என்றார்.

Related Stories: