சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அண்ணனை எரித்து கொன்ற தங்கை கைது

மாதவரம்: சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அண்ணனை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற தங்கையை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் சபாபதி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் (63). இவரது மனைவி அம்முலு. இவர்களுக்கு குழந்தை கிடையாது. அம்முலு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினம், தான் இருக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்தார். கீழே உள்ள மற்றொரு வீட்டில் முனிரத்தினத்தின் தங்கை தனலட்சுமி வசித்து வருகிறார்.

தனலட்சமியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது 2 மகள்களும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

முனிரத்தினம் இருப்பது அவர்களது பூர்வீக சொந்த வீடு. முனிரத்தினத்திற்கு 2 தங்கைகள் உள்ளனர். அதில் ஒருவர் தனலட்சுமி. மற்றொருவர் பாக்கியலட்சுமி. இதில் பாக்கியலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது கணவர் தாமோதரன் மற்றும் தாமோதரனின் மகன் உதயகுமார் ஆகியோர் மேல்தளத்தில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முனிரத்தினத்திற்கும், தனலட்சுமிக்கும் இடையே சொத்து பிரசனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு முனிரத்தினத்தின் அலறல் சத்தம்கேட்டு மேல் தளத்தில் இருந்த அவரது உறவினர்கள், முனிரத்தினத்தின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது முனிரத்தினம் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு பெரியார்நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முனிரத்தினம் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வாரிசு இல்லாத முனிரத்தினத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், தங்கை தனலட்சுமிதான் பெட்ரோல் ஊற்றி முனிரத்தினத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளார் என்பதும், சத்தம் கேட்டவுடன் அங்கிருந்து தனலட்சுமி தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று தனலட்சுமியை கைதுசெய்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தற்போது அந்தவழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர். சொத்துக்காக சொந்த அண்ணனை தங்கை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: