தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.38.25 கோடியில் கண்காணிப்பு கேமரா

சட்டம் -ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக, தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும், சமுதாய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளால், 13,491 போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்க, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.38.25 கோடியில் கண்காணிப்பு கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும்.

சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளை பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்க, அண்மையில் சமூக விரோதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசின் விரைவான, கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ளன. இச்செயல்களில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது 11 வழக்குகள் பதியப்பட்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசின் இந்த உறுதியான நடவடிக்கை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சுமார் 4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அலுவலர்களும் நேரில் சந்தித்து உண்மையை விளக்கினர். வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து முயற்சிகளையும் பீகார், ஜார்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலை தேர்வில் தேர்வானால் ரூ.25,000 ஊக்கத்தொகை

ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும். ஒவ்வோரு ஆண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்கு தயாராகுவதற்காக மாதத்திற்கு ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு பட்ஜெட்டில் ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: