மெட்ரோ பணிகள் மேற்கொள்ள கோவைக்கு ரூ.9,000 கோடி, மதுரைக்கு ரூ.8,500 கோடி நிதி

சென்னை: 2023 பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.62,246 கோடி செலவில் நடந்து வருகிறது. இதன் முதல் வழித்தடமான பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.  இந்த திட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் 2ம் நிலை நகரங்களில் முதன்மையானது.

கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தூங்கா நகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.8500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Related Stories: