தேர்தலில் போட்டியிட்டு கடனாளியாக உள்ள அண்ணாமலை அரவக்குறிச்சியில் ரூ.30 கோடி செலவு செய்தது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி நேற்று, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் போன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும் ஆட்சியாக கடந்த அதிமுக ஆட்சி இருந்தது. பொள்ளாச்சி சம்பவம் தமிழ்நாட்டுக்கே ஒரு அவமானம், அதை கூட எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வரும் ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வருகிறார். இந்த ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த விஷயத்தை டிவி பார்த்து தெரிந்துகொண்ட பழனிசாமி தற்போது டிவி பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார். துரோகத்திலேயே தன்னை ஒரு தலைவராக காட்டிக்கொள்ள வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார்.  திமுகவின் ரூ.1000 உதவித்தொகையை முதலமைச்சர் அறிவிக்கமாட்டார் என அவர் நினைத்து விட்டார். நீட் ரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது.

தேர்தலில் போட்டியிட்டு கடனாளியாக உள்ளேன் என்கிறார் பாஜ தலைவர் அண்ணாமலை. 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை 30 கோடி செலவு செய்துள்ளார். எனக்கு தெரிந்து அண்ணாமலை  ஒரு காவல்துறை அதிகாரி 8, 9 வருடத்தில் அவர் 30 கோடி ரூபாய் சேர்த்து வைக்க முடியாது. அரசு அறிவித்த 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்கிறார். பாஜ அரசு வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவோம் என்றார்கள். அதனை வட்டியுடன் கொடுப்பார்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார். எனக்கு தெரிந்து அண்ணாமலை ஒரு காவல்துறை அதிகாரி 8, 9 வருடத்தில் 30 கோடி ரூபாய் சேர்த்து வைக்க முடியாது.

Related Stories: