விவசாயம், நகை, சுயஉதவி கடன்கள் தள்ளுபடிக்கு பட்ஜெட்டில் ரூ.3,993 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தானிய சேமிப்புக் கொள்ளளவை அதிகரித்து, இழப்பினை குறைப்பதற்காக, 2021-22ம் ஆண்டு 213 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 28,000 மெட்ரிக் டன் சேமிப்புக் கொள்ளளவு கொண்ட 12 கிடங்குகள் ரூ.54 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளான விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடியும், நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1,000 கோடியும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு ரூ.600 கோடியும் என மொத்தம் ரூ.3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்திறனையும் நிதி நிலையையும் மேம்படுத்த அடிப்படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான, நீண்டகால திட்டமொன்றை அரசு வகுக்கும். உணவு மானியத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: