அரசின் நடவடிக்கையால் பற்றாக்குறை குறைந்துள்ளது தமிழ்நாட்டில் எதிர்வரும் ஆண்டில் வருவாய் 10 சதவீதமாக உயரும்: நிதித்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு 2023-2024ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறியதாவது: தமிழக வரவு செலவுத் திட்டத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9.6 % உயர்ந்துள்ளது. அதாவது, மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 329 கோடி வரவு செலவாக இருக்கிறது. இதில் வருவாய் ஆண்டுக்கு 10% சதவீதம் உயரலாம். அப்போது மாநில வருவாய் 19.3 சதவீதமாக இருக்கும். ஆனால், ஒன்றிய அரசின் மானியங்கள்  குறைந்துள்ளது. ஜிஎஸ்டி காம்பன்சேஷன் மூலம் ஆண்டுதோறும் நமக்கு வந்த ரூ.20 ஆயிரம் கோடி, 30.6.22ம் தேதிக்கு பிறகு நின்றுவிட்டது.

இதனால் நமக்கு வரவேண்டிய ரூ. 15 ஆயிரம் கோடி குறைந்துள்ளது. வரும் ஆண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி வருவாய்  குறையும். இதன் எதிரொலியாக அடுத்த ஆண்டில் ஒட்டுமொத்த வருவாய் 10.2% சதவீதமாக குறையலாம். கடந்த 2021-2022ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை மிக உச்ச அளவில் ரூ. 62 ஆயிரம் கோடிக்கு உயர்ந்தது. இந்த ஆண்டில் ரூ. 30 ஆயிரத்து 426 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கலாம். இது நல்ல முன்னேற்றம். இந்த ஆண்டில் ரூ. 16 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. மாநில ஜிடிபி கடந்த ஆண்டில் இது 3.3 சதவீதம் இருந்தது.

தமிழ்நாட்டில், 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் தரம் உயர்த்த ரூ.2800 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உயர் சிகிச்சை அளிக்கவும் அம்பத்தூரில் ரூ. 150 கோடியில் உலக திறன் மையம் அமைக்கப்படும். வட சென்னை வளர்ச்சிக்காக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கி கடற்கரை பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படும். மகளிர் சிறப்பு தொகை வழங்குவதற்கான தகுதிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். டாஸ்மாக் மூலம் இந்த ஆண்டு ரூ. 50 ஆயிரம் கோடி (எக்சைஸ் ரூ. 12 ஆயிரம் கோடி, வாட் ரூ. 38 ஆயிரம் கோடி)  வருவாய் வரும். இந்த ஆண்டு 45ஆயிரம் கோடி வந்துள்ளது.

* வருவாய் வழிகள்

ஜிஎஸ்டி காம்பன்சேஷன் ரூ.4600 கோடி. உணவுத் துறையில் இருந்து சுமார் ரூ.4000 கோடி வரவேண்டியுள்ளது. இது இரண்டும் தான் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய முக்கியமான நிலுவைத் தொகைகள். வருவாய் பற்றாக்குறையை 2 விதமாக சரி செய்ய உள்ளோம். அதன் மூலம் 20 சதவீத வளர்ச்சி இருக்கும். இப்போது சொத்து வழிகாட்டு மதிப்பை இப்போது அதிகரிக்கிறோம். அத்துடன் பதிவுக் கட்டணத்தையும் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கிறோம். அதனால் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைக்கும். வாட் வரி மூலம் இந்த ஆண்டு ரூ. 23 ஆயிரத்து 486 கோடி வந்துள்ளது. அடுத்த ஆண்டில் ரூ. 26 ஆயிரத்து 304 கோடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* கடன் அளவுகள்

கடன் வாங்கும் அளவு என்பதை 15வது நிதிக்குழு  நிர்ணயித்துள்ளபடி சுமார் ரூ. 84 ஆயிரம் கோடி வரை தமிழ்நாடு வாங்க முடியும். இந்த ஆண்டில் நாம் ரூ. 75 கோடி வாங்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டில் நாம் ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளோம். இன்னும் ரூ. 3 கோடியை இந்த மாதம் இறுதிக்குள் வாங்க  இருக்கிறோம்.

Related Stories: