மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30,000 கோடி வங்கி கடன்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 2.20லட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உயர்கல்வியில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவியர்கள் சேர்ந்துள்ளனர்.

பள்ளிப்படிப்பு முடித்த பின் உயர்கல்வியை தொடராத பல மாணவிகள் கூட தற்போது கல்லூரிகளில் சேர்ந்திருப்பது இத்திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும். 1989ம் ஆண்டில் நாட்டுக்கே முன்னோடியாக, தர்மபுரியில் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழு இயக்கம் ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி, இன்று ஒரு மகத்தான மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது. இவ்வாண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார் ரூ.24,712 கோடிக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், ரூ.30,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: