தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: மீனவர்கள் பயன்பெற ரூ.389 கோடி ஒதுக்கீடு

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது: முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், மாநிலத்தில் விலங்குகளின் நலனைப் பேணிக் காக்க மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்குகள் இனப்பெருக்கத்திற்காக கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பது அவசியமாகும். அந்தவகையில், விலங்குகள் நல வாரியத்தை வலுப்படுத்தும் விதமாக ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம், விலங்குகளின் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளவும், உள்ளாட்சிகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், விலங்குகள் நலப்பணிகளைச் செயல்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது.

அதேபோல, மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்கள் பயன்பெறும் பொருட்டு ரூ.5,000 என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத் தொகையை ரூ.6,000மாக கடந்த ஆண்டு முதல் இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. அதன்படி, வரும் நிதியாண்டு முதல் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன்பிடி தடைகால நிவாரணம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் என 4.3 லட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், பவளப்பாறைகள் மீன்களுக்கு புகலிடம், உணவு அளித்து மீன்குஞ்சுகள் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து மீன்வளத்தை பாதுகாக்கின்றன. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில் 3 மாவட்டங்களில் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப்பாறை அலகுகள் ரூ.79 கோடியிலும், பாக் வளைகுடா தவிர ஏனைய மாவட்டங்களில் 200 செயற்கை பவளப்பாறை அலகுகள் ரூ.64 கோடிக்கும், ஒன்றிய மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவியில் தமிழ்நாடு முதலிடம்

மாநிலம் முழுவதும் 6.84 லட்சம்  மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் ஓய்வூதியத்தை 1,000  ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து  2,000 ரூபாயாகவும் உயர்த்திட முதல்வர் ஏற்கனவே ஆணையிட்டுள்ளார். இதற்கென, பட்ஜெட்டில் ரூ.1,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் உத்தரவாதம், வட்டி மானியம் ஆகியவற்றை  மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் பயனாக, 11,155 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக ரூ.50 கோடி கடனுதவியை இந்த ஆண்டில் வழங்கி, நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. அரசு திட்டங்களின் பலன்கள் முழுமையாக மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய, மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக, பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேரின் விவரங்கள் கொண்ட தரவுத்தளம் ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: