தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் பள்ளிகல்விதுறையின் கீழ் கொண்டு வரப்படும்

தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: பொது வாழ்வில் அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் சமஉரிமையையும் நிலைநாட்டிட கல்வி நிலையங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. இதன் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு பள்ளிகள், உயர்தர ஆய்வகங்கள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களின் பயன்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டியது அவசியமாகும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19-8-2021 மற்றும் 12-4-2022 ஆகிய நாட்களில் நடந்த மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கல்விப் பெருவழியில் நமது லட்சியமான சமூகநீதியை அடைந்திட, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெற அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், வரும் நிதியாண்டிலிருந்து ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக, 35 சதவீதம் மூலதன மானியமும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். 2023-24ம் பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அயோத்திதாச பண்டிதர் திட்டம்: புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், நலப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி வழங்கப்படும். நகர்ப்புரப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: