தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023-24: தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். கடல் பல கடந்து, சமர் பல வென்று, இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப் பேரரசு. தமிழரின் கலை, இசை, கட்டிடக் கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ‘மாபெரும் சோழர் அருங்காட்சியகம்’ ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடியில் மேற்கொள்ளப்படும். மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ.50 லட்சம் உயர்வு

பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாக கட்டப்படும். வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளை கருத்திற்கொண்டு, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடு கட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டில் இருந்து உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில்’ நிதியுதவியாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், இந்த நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு 2021-22ம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23ம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்கள பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: