வண்ணாரப்பேட்டை மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 4 நபர்கள் கைது: 26.1 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 26.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை  (Drive  against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (19.03.2023) மூலக்கொத்தலம் சிக்னல் அருகில், ரகசியமாக கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1.சோமராஜ் (எ) பாபாய், வ/37, த/பெ.கங்காராஜ், சிந்துலாலி மண்டலம், விசாகப்பட்டிணம், ஆந்திர மாநிலம் 2.கந்தேரி சிட்டிபாபு, வ/35, த/பெ.சான்பாசையா, சிந்துலாலி மண்டலம்,   விசாப்பட்டிணம், ஆந்திரமாநிலம் 3.சின்னசுப்பாய், வ/55, த/பெ.லட்சுமையா, சிந்துலாலி மண்டலம், விசாப்பட்டிணம், ஆந்திர மாநிலம் ஆகிய மூவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதே போல, E-1 மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (19.03.2023) மைலாப்பூர் இரயில் நிலையம் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்ததின் பேரில், மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த பீரவின்குமார், வ/30, த/பெ.வத்திமல், 2வது லேன், பிளவர்ஸ் ரோடு, புரசைவாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5.1 கிலோ கஞ்சா  பறிமுதல் செய்யப்பட்டது.

 கைது செய்யப்பட்ட மேற்படி 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: