பெண்களுக்கான பொற்காலம் ...இலவச பேருந்து, மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, சிறப்பு புத்தொழில் இயக்கம் : பட்ஜெட்டில் அசத்தல்!!

சென்னை: பெண்களுக்கென சிறப்பு புத்தொழில் இயக்கம் ஒன்றை அரசு தொடங்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதன் விவரம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் கல்வி ஆண்டுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் வகுப்பு வரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் 2.20 இலட்சம் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, உயர் கல்வியில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 20,477 மாணவியர் சேர்ந்துள்ளனர். பள்ளிப் படிப்பு முடித்த பின் உயர் கல்வியை தொடராத பல மாணவிகள் கூட தற்போது கல்லூரிகளில் சேர்ந்திருப்பது இத்திட்டத்தின் வெற்றிக்குச் சான்றாகும்.

சுய உதவி குழு இயக்கம் இன்று ஒரு மகத்தான மக்கள் இயக்கமாகத் திகழ்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் திறன் மேம்பாட்டிற்கும் வாழ்வாதார வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இவ்வாண்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, இதுவரை, சுமார் 24,712 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழில்முனைவோர்கள், தேவையான கடன்களை உரிய நேரத்தில் பெறுவதிலும், பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், தொடர்ந்து இடர்பாடுகளை சந்திக்கின்றனர். இச்சவால்களை எதிர்கொள்ள, பெண்களுக்கென சிறப்பு ‘புத்தொழில் இயக்கம்’ ஒன்றை அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர், புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும்.

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்; மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்.15-ம் தேதி தொடங்கும்; தகுதிவாய்ந்தகுடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

மகளிர் இலவச பஸ் பயணத்துக்காக ரூ 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: